வாங்கிய சில நாளிலே பழுதான பல்சர் பைக்!

ஈரோட்டில் தனியார் ( பஜாஜ் ) இருசக்கர வாகன ஷோரூமில் புதிதாக வாங்கிய ( பல்சர்)  இருசக்கர வாகனத்தில் பழுது ஏற்பட்டதால், வேறொரு புதிய வாகனத்தை மாற்றித் தருமாறு கேட்டு இளைஞர் ஷோரூம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌரிசங்கர் ( 28) , தனியார் வங்கியில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த விநாயகர் சதுர்த்தி என்று புதிதாக இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார், வாங்கியதில் இருந்து தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் இன்ஜினில் இருந்து ஆயில் கசிந்துள்ளது. 

இதுகுறித்து அருகில் இருந்த இருசக்கர வாகன பழுது பார்க்கும் இடத்தில் விட்டு பார்த்தபோது ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் எஞ்சின் பகுதியில் பிரித்து வேலை செய்துள்ளது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் இதுகுறித்து இன்று ஈரோடு - சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் சென்று வாகனத்தை ஒப்படைத்து வேறு வாகனத்தை தருமாறும் அல்லது கட்டிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். 

ஆனால், அந்நிறுவனம் பழுதான இன்ஜினை சரி செய்து தருவதாகவும், பணத்தை திருப்பித் தருவது அல்லது வேறு இருசக்கர வாகனத்தை தர முடியாது என கூறியுள்ளனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் ஷோரூம் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஷோரூம் நிறுவனத்தினர், பணியாளர்களைக் கொண்டு ஷோரூமை அவசர அவசரமாக பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். மேலும் இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com