இன்னும் சில நிமிடங்களில் சூரியனை நோக்கி பாயும் ஆதித்யா எல்-1!

இன்னும் சில நிமிடங்களில் சூரியனை நோக்கி பாயும் ஆதித்யா எல்-1!

விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்-1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு PSLV C 57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. ராக்கெட் 120 நாட்கள் பயணித்து பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள ‘லாக்ராஞ்சியன் பாய்ண்ட் 1’ என்னும் இடத்தில் விண்கலத்தை நிலைநிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, லாக்ரேஞ்சியனை சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா எல் 1, அங்கிருந்து தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு முடிவுகளை அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

7 pay load -களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 இல் 4 payload கள் சூரியனை நேரடியாக கண்காணிக்கும் என்றும், மீதமுள்ள மூன்றும் லாக்ரேஞ்சில் உள்ள துகள்கள் மற்றும் புலங்களைப் ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் பற்றி ஆய்வு செய்ய இதில் VELC என்ற தொலைநோக்கி, சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி என 7 முக்கிய கருவிகள் ஆதித்யா எல் -1 இல் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் மூலம் சூரியனின் வெப்பம், காந்தத் துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை உள்ளிட்டு சூரியக்குடும்பம் தொடர்பான ரகசியங்களை ஆதித்யா எல்.1 வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆதித்யா எல் -1 சூரியனை நெருங்காமல் வெளிப்புற வளிமண்டலத்தை மட்டும் ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com