"விவசாயத்தை காக்க நிலவில் ஆய்வு செய்து வருகிறோம்" - முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை

"விவசாயத்தை காக்க நிலவில் ஆய்வு செய்து வருகிறோம்" - முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை
Published on
Updated on
2 min read

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயத்தை காக்க நிலவில் ஆய்வு செய்து வருவதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கே எம் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்தனர் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசிய மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
 
குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு எப்படி உள்ளது என்ற செய்தியாளர் கேள்விக்கு:-
 
நீண்ட காலமாக சொல்லிக் கொண்டிருந்தது தான். குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் தற்போது உருவாகி இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் செலுத்துவதற்கான செலவுகள் அதிகரிக்கும். ஆனால் அதற்கான செலவு குலசேகரப்பட்டினத்தில் குறைவாக இருக்கும்
 
 மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் பெரிய அளவிலான ராக்கெட் ஏவப்பட்டு வந்த நிலையில் குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் சிறியதாக ராக்கெட்டுகளை ஏவுவதற்கு பொருத்தமான இடமாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்படுவதால் அடிக்கடி ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்துவதற்கான வேலைகளும்  
 தொடர்ந்து மேலும் அதன் மூலம் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வழி உள்ளது.

நீண்ட காலமாக இதற்கான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது”, எனத்  தெரிவித்தார். 
 
ஆசாத்தி சாட் ஒன்று மசாஜ் சாட் இரண்டு செயற்கைக்கோள்கள் வெளியில் செலுத்துவதற்கு ஆன மென்பொருளை பள்ளி மாணவர்கள் தயாரித்த சூழ்நிலையில் வரும் காலங்களில் செயற்கைக்கோள் தயாரிப்பில் மாணவர்களின் பங்கு இருப்பதற்கான வழிவகைகளை இஸ்ரோ ஏற்படுத்துமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு:- 

“தற்போதுள்ள சூழ்நிலையில் செயற்கைக்கோள் தயாரிப்பில் ஐஐடி துறையில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் ஊதியத்தை எதிர்பார்ப்பதால் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது.  இருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு குறித்து சிறு வயது முதலே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அதிகமாக மாணவர்கள் செயற்கைக்கோள் தயாரிப்பில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்”, என தெரிவித்தார்.

”செஸ் வீரரை உருவாக்குகிறோம், பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறோம்;  அது போல் சிறுவயதிலேயே விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார். 
 
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் முயற்சி தொடர்பான கேள்விக்கு:-

“ககன்யா திட்டத்தின் மூலம் நடத்தப்படும் ஆய்வுகள் அனைத்தும் முழுக்க முழுக்க விண்வெளியிலேயே நடைபெறுவதால் அதிலிருந்து மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலையில் தப்பித்து வருவதற்கான வழிமுறைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். படிப்படியாக திட்டத்திற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதால் நிச்சயம் வெற்றி பெறும்”,  என்று தெரிவித்தார். 
 
சந்திராயன் - 3  விண்கலத்தில் ரோவர் உறக்க நிலைக்குச் சென்ற நிலையில் மீண்டும் எழுவதற்கான வாய்ப்பு உள்ளதா?  என்ற கேள்விக்கு:- 

அது 14 நாட்களை கடந்து விட்டதால் நிச்சயம் மீண்டும் எழுவதற்கான வாய்ப்பு இல்லை. வேறு ஏதேனும் நிகழ்வுகள் ஏற்பட்டால் மட்டுமே அது மீண்டும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்தார். 
 
தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இஸ்ரோவின் வளர்ச்சி பத்தாண்டுகளில் அதிக வளர்ச்சி பெற்றிருப்பது ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் தற்போது சுதந்திரமாக செயல்படுவதும் ஒரு காரணமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு

“ஆராய்ச்சியாளர்கள் சுதந்திரம் எப்போதும் உள்ளது. தற்போது ஆராய்ச்சிகளின் தேவை அதிகரித்துள்ளது. அதற்கான கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு காலத்தில் இந்தியா மற்ற நாடுகளை எதிர்பார்த்திருந்த நிலையில்,  தற்போது இந்தியாவின் ஆராய்ச்சியை அனைத்து நாடுகளும் உற்று நோக்குகின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கு விண்வெளி துறையும் ஒரு காரணமாக உள்ளது என உலக நாடுகள் பார்க்கும் ஒரு நிலை உருவாகியுள்ளது”, என்று தெரிவித்தார். 
 
பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுவதால்   இந்திய விஞ்ஞானிகள் விவசாயத்தை பாதுகாப்பதற்கான வழிவகை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறதா?  என்ற கேள்விக்கு:-

“ஓசோனில் இருந்த ஓட்டையை ஆய்வு மூலம் தான் கண்டறிந்தோம். அது போல் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிலவில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து உலக ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். அது வெற்றி பெறும் பட்சத்தில் நிலவில் கிடைக்கும் பொருட்களை வைத்து பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான வழிவகைகள்  கிடைக்கும் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com