இலங்கையில் தலைவிரித்தாடும் விலைவாசி - டின்னர் சாப்பிட இவ்வளவா? மக்கள் வேதனை!

பொருளாதார அளவில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வரும் இலங்கையில், அங்குள்ள உணவகத்தின் பில் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் தலைவிரித்தாடும் விலைவாசி - டின்னர் சாப்பிட இவ்வளவா?  மக்கள் வேதனை!
Published on
Updated on
1 min read

அண்டை நாடான இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கொரோனாவுக்கு பின் சுற்றுலாத் துறை இன்னும் முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும் அப்படியே அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இதன் காரணமாக அங்கு காய்கறி, பழங்கள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. அடிப்படை தேவையான உணவுப் பொருட்களை கூட வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், எரிபொருளின் பற்றாக்குறையும் தாண்டவமாடுவதால் அந்நாட்டில் மின்வெட்டும் தலைவிரித்து ஆடுகிறது. இப்படி காய்கறி முதல் மின்சாரம் வரை அனைத்திற்கும் பற்றாக்குறை உள்ளதால், அனைத்து பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் பில் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அந்த தனியார் உணவகத்தில் இரவு உணவைச் சாப்பிட ஒருவர் தனது டின்னருக்கு மட்டும் சுமார் 4,750 இலங்கை ரூபாய் செலவழித்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் விலைவாசி எந்தளவுக்கு உச்சத்தில் உள்ளது என்பதை தெள்ள தெளிவாக காட்டுகிறது.

அந்த பில்லில் வடை ஒன்று 350 இலங்கை ரூபாய்க்கும், ராவா தோசை ஒன்று 750 இலங்கை ரூபாய்க்கும், இட்லி ஒன்று 350 இலங்கை ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் விட மினரல் வாட்டர் விலை 100 இலங்கை ரூபாயாகவும், காபியின் விலை 300 இலங்கை ரூபாயாகவும் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த பில் தான் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com