அமித்ஷாவா? ஆப்பிளா?

அமித்ஷாவா? ஆப்பிளா?

கா்நாடகாவில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட ஆப்பிள் மாலையில் இருந்து தொண்டா்கள் ஆப்பிள்களை போட்டி போட்டுக்கொண்டு பறித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்கு சேகரிக்க அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பாஜக சார்பில் பெங்களூரு விஜயபுரா பகுதியில் பிரச்சாரப் பேரணி நடைபெற இருந்தது. இதில் உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்க இருந்த நிலையில் அவரை வரவேற்க பிரமாண்டமான ஆப்பிள் மாலை தயாாிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அமித்ஷாவை வரவேற்க வைக்கப் பட்டிருந்த ஆப்பிள் மாலையில் கட்டப்பட்டிருந்த ஆப்பிள்களை தொண்டா்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளி சென்றனா். 

கிரேனில் கட்டப்பட்டிருந்த ஆப்பிள் மாலையை கீழே இறக்குவதற்குள் அதனை சூழ்ந்து கொண்ட பாஜகவினர் மாலையில் கட்டப்பட்டிருந்த ஆப்பிள்களை போட்டி போட்டுக்கொண்டு பறித்தனர். இக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ''ஒரு ஆப்பிளுக்கு அடித்துக்கொள்ளும் கூட்டம்'' என பாஜகவினரை கலாய்த்து வருகின்றனர்.