”இந்தாம்மா ஏய்” என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர்...!

”இந்தாம்மா ஏய்” என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர்...!
இயக்குனரும் பிரபல குணச்சித்திர  நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருடைய இந்த திடீர் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
”இந்தாம்மா ஏய்” என்ற வசனத்தின் மூலம் அண்மையில் ரசிகர்களுக்கிடையே பிரபலமானவர் மாரிமுத்து. 
தேனி மாவட்டம் பசுமலையை சேர்ந்த மாரிமுத்துவிற்கு  வயது 56. தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த மாரிமுத்து  கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பின்னர் வெள்ளித்திரையில் நடிகராக உருவெடுத்த மாரிமுத்து பரியேறும், பெருமாள், சண்டைக்கோழி, ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர். 
இதனை தொடர்ந்து சின்னதிரையிலும் கால் பதித்த மாரிமுத்துவுக்கு அங்கும் வெற்றியை தேடி தந்தனர் அவருடைய ரசிகர்கள்.  எதிர் நீச்சல் என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் மாரிமுத்து
இந்நிலையில் சின்னத்திரை சீரியலுக்காக ஸ்டூடியோவில் டப்பிங் முடித்து விட்டு சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது அவருக்கு வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனை தொடர்ந்து அவர் வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.  இவரது திடீர் மரணம்  தமிழ் திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாரிமுத்து மறைவிற்கு கவிபேரரசு வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவருடைய மறைவை நம்பமுடியவில்லை என வைரமுத்து  உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்  சென்னை சாலி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழ்  திரைத்துறையினர் 
 மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி  வருகின்றனர்.
 
மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் சரத்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் அளிப்பதாக நடிகர் சரத்குமார் கூறினார். 
இதேபோல் இயக்குனர்கள் வசந்த், முத்தையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, வையாபுரி  கணேஷ், விருமாண்டி, சென்ராயன் உள்ளிட்ட  தமிழ் திரைப்பிரபலங்கள்  அஞ்சலி செலுத்தி  வருகின்றனர். 
 
அவரது உடல் நாளை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தில் வைத்து இறுதி மரியாதை செய்யப்படும் என கூறிப்படுகிறது.