திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு...! தாம்பரத்தில் எடப்பாடி போஸ்டர்...!

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு...! தாம்பரத்தில் எடப்பாடி போஸ்டர்...!

நேற்று திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்திய நிலையில் இன்று தாம்பரத்தில் அதனை விமர்சிக்கும் விதமாக தாம்பரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக  உட்கட்சி பூசலால் 3 ஆக பிரிந்து இருக்கிறது. இதில் முன்பே அதிமுகவை விட்டு வெளியேறிய டிடிவி தினகரன் தனிக்கட்சியை உருவாக்கிய நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுகவை நடத்தி வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் 2021 ல் அதிமுக கூட்டணி தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து அதிமுகவில் ஒற்றை தலைமை இல்லாததே சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் என சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவேறு துருவங்களாக மாறினர். இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.  மேலும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உத்தரவிட்டது. இதனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பாக அவர்கள் பக்கம் பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில்  நேற்று மாநாடு நடைபெற்றது. 

இந்நிலையில் அந்த மாநாட்டை விமர்சிக்கும் விதமாக "நாய் அழுதாலும் நரி ஊளையிட்டாலும் இனி எங்கள் சிங்கத்தின் கர்ஜனையே" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் தாம்பரம் முழுவதும் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பையும் பேசும் பொருளாகவும் உள்ளது