பயணி தவறவிட்ட ஒன்றரை லட்சத்தை போலீஸிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் ..!

பயணி தவறவிட்ட ஒன்றரை லட்சத்தை போலீஸிடம்  ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் ..!

சென்னையில் பயணி ஒருவர் தவறவிட்ட ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை ஆட்டோ ஓட்டுனர் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். 

சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர் ( வயது 48).  இவரது ஆட்டோவில் நேற்று மாலை 5 மணிக்கு வள்ளுவர் கோட்டம் லேக் ஏரியாவில் ஒரு பெண் பயணி ஏறினார்.
பின்னர், தி.நகர் பகுதியில் அவரை இறக்கி விட்டு அரும்பாக்கத்துக்கு சவாரி சென்றார்.

அடுத்த சவாரிக்காக காத்திருந்தபோது, ஆட்டோவின் இருக்கையில் ஒரு கைப்பை இருப்பதை கண்டார்.
இதையடுத்து, ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர் அந்தகைப்பையை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க  சென்றார். அங்கிருந்த போலீசார் வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினர்.

வேப்பேரி போலீசார் ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர் கொடுத்த கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு லட்சத்து 22,490 ரூபாய் ரொக்கம், அடையாள அட்டை, சான்றிதழ்கள் ஆகியவை இருந்தன.

பின், பணத்தை தவறவிட்டவர் நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவை சேர்ந்த பூர்ணிமா (வயது 37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை தொடர்பு கொண்டு வேப்பேரி காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

பூர்ணிமா தனது கணவருடன் வந்து பணத்தை பெற்றுக் கொண்டார்.  நேர்மையாக பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பூர்ணிமா 5,000 ரூபாய் சன்மானம் வழங்கினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com