சிறுவனை முட்டித்தூக்கும் பசுமாடு- பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

சென்னை அருகே வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சிறுவனை பசுமாடு முட்டித்தூக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனை முட்டித்தூக்கும் பசுமாடு- பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

சென்னை அடுத்த அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர் நேற்று முன் தினம் மாலை தனது குடும்பத்துடன் வெளியே செல்ல தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது தினேஷின் மகனான சரத் தனது உறவுக்கார பெண்ணுடன் வீட்டிற்கு வெளியே வந்துள்ளான்.

அந்த நேரன் தெருவில் கூட்டமாக கன்றுடன் நின்றிருந்த பசுமாடு ஒன்று திடீரென சிறுவனை ஆவேசமாக முட்டியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு தந்தை மற்றும் உறவினர்கள் பசு மாட்டை விரட்டினர் அப்பொழுது மீண்டும் அந்தப் பசு மாடு சிறுவனையும், சிறுவனின் பாட்டியையும் முட்ட தொடங்கியது.

பின்னர் மாட்டை விரட்டிய அங்கிருந்தவர்கள், பயம் கலந்த வலியால் பதைபதைத்துப் போன சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் அந்த பகுதியில் ஏராளமான மாடுகள் அவ்வப்போது வீதியில் சுற்றி வருவதாகவும் இதுகுறித்து அம்பத்தூர் மாநகராட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.