தமிழில் ட்வீட்...! இந்தியில் பேனர்...!!

தமிழில் ட்வீட்...! இந்தியில் பேனர்...!!

பிரதமர் வருகையை ஒட்டி பாஜகவினர் இந்தியில் பேனர் வைத்துள்ளனர். அதேநேரத்தில் பிரதமர் மோடி சென்னை வருவதாக தமிழில் டிவீட் செய்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையம், சென்னை  கோவை இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை உள்ளிட்ட  பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார்.  இந்நிலையில் அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாட்டினை பாஜகவினர் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை சிந்தாதிரிபேட்டையில் பிரதமர் மோடியை வரவேற்க இந்தியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரில் பிரதமர் மோடியை வரவேற்று இந்தியில் எழுத்துகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்தி பேசாத மாநிலமான தமிழ் நாட்டில் இந்தியில் வைக்கப்பட்ட இந்த பேனர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதை பாஜகவினரின் இந்தி திணிப்பின் ஒரு பகுதியாகவே கருதப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
   
ஆனால் அதேநேரம் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த விமான முனையம், சென்னை  கோவை இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைக்க சென்னை வருவதாக தமிழில் பதிவிட்டுள்ளார். ஒரே நேரத்தில் பிரதமர் தமிழிலும் பாஜகவினர் இந்தியிலும் எழுதி இருப்பது சமூக வலிதளங்களில் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. மேலும் இது பாஜகவினரின் இரட்டை தன்மையை வெளிப்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.