மூன்று மாதங்களுக்கு முன், ஆதரவற்று ரோட்டில் தூக்கி வீசப்பட்டு கிடந்ததும் அதே தக்காளிதான் ! ,.. சமீப காலமாக மக்களை அலைக்கழித்து, ஆட்டிவைத்ததும் அதே தக்காளிதான் .. !
ஆப்பிள் ஐ ஃபோன் கூட வாங்கிறலாம் போல,.. இந்த தக்காளியை வாங்க இவ்ளோ கஷ்டமா? என்று புலம்பித்தள்ளியவர்களும் உண்டு. கால் வலிக்க காத்திருந்து வரிஞ்சுக்கட்டி வரிசையில் நின்று வாங்கியவர்களும் உண்டு.
மக்களின் இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு, அரசு சில முயற்சிகள் எடுத்துவந்தாலும், இன்னும் ஒரு விதத்தில் போக்குவரத்து காவலர்கள் மக்களுக்கு சாலை பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முறையாக பயனிப்பவர்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய நிகழ்வுகளும் நடந்தேறின.
இன்னொரு புறம் தங்களது வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள நினைக்கும் வியாபாரிகளும் இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமானதாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் சேலத்தில் ஒரு ஹெல்மெட் கடை தங்களது கடையில் ’ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்’ என அறிவித்திருந்தது. அப்போது, மக்கள் அதனை வாங்க திரண்டனர்.
அதேபோல, மன்னார்குடியில், மற்றுமொரு கடையில் ’ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ தாக்காளி இலவசம்’ என அறிவித்திருந்தனர். அதனையும் வாங்க மக்கள் குவித்தனர்.
அந்த வரிசையில், தற்போது,... டீ புரியர்களுக்கு சுட சுட ஒரு ஆஃபர் ஒன்றை அள்ளித்தருகிறது கொளத்தூரில் இன்று புதிதாக துவங்கப்பட்ட டீ கடை ஒன்று.!
கொளத்தூர் கணபதி ராவ் நகரில் டேவிட் என்பவர் புதியதாக டீ கடை ஒன்றை இன்று மாலை தொடங்கியுள்ளார். இந்த டீக்கடையில் ’ஒரு டீ வாங்க வருபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம்’ என அறிவித்திருந்தார். அதன்படி இந்த அறிவிப்பை கேட்ட பொதுமக்கள் கடையின் முன்பு திரளாக திரண்டனர்.
இன்றைய தினத்தில் தக்காளி நிற்கும் விலையில் ஒரு கிலோ தக்காளியை ஒரு டீ வாங்கினால் இலவசம் என்ற அறிவித்த டீக்கடைக்காரரை புகழ்ந்து தள்ளினர்.
இந்த அறிவிப்பு மூன்று நாட்களுக்கு தொடரும் எனவும் தினமும் தலா 100 பேருக்கு இதுபோல் இலவசமாக வழங்கப்படும் எனவும் கடையின் உரிமையாளர் டேவிட் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, கடையில் முன்னாள் இலவச தக்காளியை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் கொளத்தூர் போலீசார் அங்கு குவிக்கப்பட்ட நிலையில் போலீசாரின் பாதுகாப்பில் இலவச தக்காளி விநியோகம் நடைபெற்றது.