மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் தனியார் பொருட்காட்சியில் குழந்தைகள் சாப்பிடும் அப்பளத்தின் மீது நடக்கும் இளைஞர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருவிழாக்களில் விற்கப்படும் பெரிய வகை அப்பளங்கள் அனைவரையும் ஈர்க்கக் கூடியவை. இதற்கு டெல்லி அப்பளம் என பெயரும் உண்டு. அதுவும் குழந்தைளுக்கு இதுபோன்ற பெரிய வகை அப்பளம் என்றால் மிகவும் விருப்பம். அதனால் அதனை வாங்கித் தருமாறு தங்களது பெற்றோரிடம் அடம் பிடிக்கும் குழந்தைகள் ஏராளம் . ஆனால் கோவையில் ஒருவர் இந்த அப்பளத்தை காய வைப்பதை பார்த்தால் இனி இந்த அப்பளத்தை வாழ்நாளில் உண்ணவே மாட்டீர்கள். அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் -கோவை சாலையில் ஐயப்பன் கோயில் அருகே தனியார் நிறுவனம் சார்பில் பொருட்காட்சி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் விற்கப்படும் அப்பளத்தை ஒருவர் காய வைக்கும் காணொளி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த காணொளியில் அப்பளத்தை காய வைப்பதற்காக தரை மீது போடும் விரிப்பின் ஒருவர் ஈரமான அப்பளத்தை காயவைக்கிறார். அது மட்டுமின்றி பரவலாக காய வைக்கப்பட்ட அப்பளங்களின் மீதே நடந்து வந்து அந்த இளைஞர் அப்பளத்தை திருப்பியும் போடுகிறார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த நபர் இதனை கைபேசியில் பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
https://www.youtube.com/embed/54oWD2a-WLc?si=LLpJetbfqADRQ1-5
இந்த காணொளியை பார்க்கும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அனைவரும் சாப்பிடும் உணவுப்பொருட்களை இப்படி சுகாதாரமற்ற முறையிலும் பொறுப்பற்ற முறையிலும் தயாரிக்கும் இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகமும், மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையம் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.