பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி புதிய ஹாஷ்டேக் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையம், சென்னை கோவை இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார்.
இதனிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சியும் புதிய நிலக்கரி திட்ட அறிவிப்பை எதிர்த்து பிரதமரின் வருகைக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமரின் சென்னை வருகையை எதிர்க்கும் விதமாக புதிய ஹாஷ்டேக் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. #GoBackNarendra என்ற ஹாஷ்டேக் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. முந்தைய காலங்களில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் பொழுது #GobackModi என்ற ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்தது.சில தினங்களுக்கு முன்னர் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அவரது நாடாளுமன்ற உறுபினர் பதிவியும் பறிக்கப்பட்டது. இதனை கிண்டல் செய்யும் வகையில் நெட்டிசன்கள் #GoBackNarendra என்ற புதிய ஹாஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.