மாணவியை கன்னத்தில் அறைந்த அரசு பேருந்து நடத்துனர்..! காதுவலியால் துடித்த அவலம்..!

மாணவியை கன்னத்தில் அறைந்த அரசு பேருந்து நடத்துனர்..! காதுவலியால் துடித்த அவலம்..!
Published on
Updated on
1 min read

அரசு பேருந்தில்  மாணவியை கன்னத்தில் அறைந்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில்  பெற்றோர் புகார் அளித்தனர். 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், சுற்றுலா வழிகாட்டி, இவரது மகள் மோனிஷா(வயது15). இவர் மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இன்று (செவ்வாய்கிழமை) மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை நடந்த ஆங்கிலம் சிறப்பு வகுப்பில் பயின்றுவிட்டு அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் தனது வீட்டிற்கு செல்வதற்காக தாம்பரம் டூ மாமல்லபுரம் செல்லும் தடம் எண்: 515 என்ற பேருந்தில் ஏற முயன்றுள்ளார். 

பஸ்சில் நிற்க கூட இடம் இல்லாத நிலையில், கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி மோனிஷா படியில் நின்று கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி தவித்துள்ளார். அப்போது பயணிகள் ஏறும் முன்பே பேருந்து திடீரென எடுக்கப்பட்டு எலக்ட்ரானிக் கதவு மூடப்பட்டது. 

பிறகு பஸ்சில் கூட்டம் முண்டியடித்தால் எரிச்சலடைந்த அந்த பேருந்து நடத்துனர் படியில் நின்று கொண்டிருந்த மோனிஷாவை கன்னத்தில் பளார் பளார்  என 3 முறை அறைந்து தனது கோபத்தை அந்த மாணவியின் மீது காட்டியுள்ளார். 

பின்னர் நடத்துனர் அறைந்ததால் காதுவலியால் துடித்த மோனிஷா தனது பெற்றோரிடம் கண்டக்டர் தன் கன்னத்தில் அறைந்த தகவலை வீட்டிற்கு வந்து அழுது கொண்டே கூறியுள்ளார். பிறகு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தனது பெற்றோருடன் மாமல்லபுரம் காவல் நிலையம் வந்த வந்த மாணவி மோனிஷா, தன் கன்னத்தில் அரைந்த அரசு பேருந்து நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் செய்தார். 

இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் தாம்பரம் போக்குவரத்து பணிமனைக்கு தகவல் அனுப்பி சம்மந்தப்பட்ட நடத்துனர் யார்? அவர் பெயர் என்ன?  என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com