

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் வசித்து வந்த இந்தியர்களை, மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. விமானப் படை விமானங்கள் மூலம், இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 இந்தியர்களை தலிபான்கள் கடத்திச் சென்று விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை எனவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா வாசிக் தெரிவித்திருந்தார். மேலும் காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் விமானநிலையத்தில் காத்திருந்த 150 பேரும் பரிசோதனைக்காக தாலிபான்களால் வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், சிறிது நேரத்தில் விமான நிலையத்திலே விடப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும், காபூல் விமானநிலையத்தில் பத்திரமாக உள்ளவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருவதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.