இலங்கையில் ரயில் தடம் புரண்டு 17பேர் காயம்...!

இலங்கையில் ரயில் தடம் புரண்டு 17பேர் காயம்...!

இலங்கையில் கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற ரயில் தடம்புரண்டதில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கல்லோயாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில் தடம் புரண்டதில்  17 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்ற  இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் இரயில் ஓட்டுனர்கள்  இருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேற்சொன்ன இரயில் தடம் புரண்ட போது அதன் ஒரு பெட்டி கவிழ்ந்துள்ளது. அதில் பயணித்த 17 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். மேலும் காயமடைந்த 17 பேரும் சிகிச்சைகளுக்காக கந்தளாய் மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தரமற்ற இரயில்வே சேவையால் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் ரயில்கள் தடம் புரள்வது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. 2020ஆம் ஆண்டு 29 முறையும் 2021ஆம் ஆண்டு 34 முறையும் 2022ஆம் ஆண்டு 45 முறையும் இலங்கையில் ரயில்கள் தடம் புரண்டுள்ளன.