இலங்கையில் அடுத்ததாக மின்கட்டணம் உயர்வு...இவ்வளவு சதவீதமா?

இலங்கையில் அடுத்ததாக மின்கட்டணம் உயர்வு...இவ்வளவு சதவீதமா?

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மின்கட்டணம் 264 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். 

இலங்கையில் மின்கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை:

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பெரும் நெருக்கடி சூழல் நிலவுகிறது. அந்நிய செலவாணி இன்றி இறக்குமதியும் குறைந்ததால் மக்கள் தவிக்கின்றனர். எண்ணெய் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் சிலோன் மின்சார வாரியம், மின்கட்டணத்தை உயர்த்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

சிலோன் மின்சார வாரியம் கோரிக்கை:

அதன்படி மின்வாரியத்தை லாபமாக்க சிலோன் மின்சார வாரியம், மின்கட்டணங்களை 800 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் அதை நிராகரித்த அரசு, அதிகபட்சமாக 264 சதவீதம் உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.

கூடுதல் தொகை:

இதன்படி ஒரு யூனிட் மின்சாரத்துக்கு இரண்டரை ரூபாய்வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 8 ரூபாயாக கணக்கிட்டு வசூலிக்கப்பட உள்ளது. அதாவது மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர், ஏற்கனவே செலுத்தும் தொகையுடன் கூடுதலாக198 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.   

ஏற்றம் இறக்கம்:

இந்த  மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தையும், அதே வேளையில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த அளவில் விலை உயர்வு ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது. 
 
இதேபோல் 15 ரூபாயாக இருந்த தபால் கட்டணம், 50 ரூபாயாகவும், பதிவு தபால் கட்டணம் 45 ரூபாயில் இருந்து 110 ரூபாயாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மக்களுக்கு கூடுதல் சுமை:

ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் விலைவாசியால் தவித்து வரும் மக்களுக்கு, தற்போது மின் கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.