பாலியல் குற்றச்சாட்டில் தப்பியோடிய கிரிக்கெட் வீரர் கைது!!!

பாலியல் குற்றச்சாட்டில் தப்பியோடிய கிரிக்கெட் வீரர் கைது!!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

பாலியல் குற்றச்சாட்டு:

ஆகஸ்ட் மாதம் காத்மண்டுவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து 22 வயதான சந்தீப் லாமிச்சானே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு 17 வயது சிறுமி புகாரளித்தார்.  இதுவரை 30 சர்வதேச ஒருநாள், 44 டி20 போட்டிகளில் விளையாடிய சந்தீப், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையையும் பெற்றவராவார். செப்டம்பர் 8ஆம் தேதி நேபாள நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நேபாள கிரிக்கெட் கேப்டனான லாமிச்சானே இடைநீக்கம் செய்யப்பட்டார்.
 
தப்பியோட்டம்:

கற்பழிப்பு குற்றச்சாட்டு சார்பாக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோடிய லாமிச்சானே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு நேபாளம் திரும்பியுள்ளார். 

கைது:

குற்றச்சாட்டுகளை மறுத்த லாமிச்சானே, விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று காத்மாண்டு மாவட்ட காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குற்றமற்றவன்:

இதற்கு முன்னதாக லமிச்சனே அவரது முகநூல் பக்கத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடுவதற்காக வீடு திரும்புவதாக பதிவிட்டிருந்தார். "விசாரணையின் அனைத்து நிலைகளிலும் நான் முழுமையாக ஒத்துழைப்பேன், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டத்தில் ஈடுபடுவேன். நீதி வெல்லட்டும்" என்று லாமிச்சேன் பதிவிட்டிருந்தார்.

முகநூலில்...:

சர்வதேச  கிரிக்கெட் வீரரான லாமிச்சானே கடந்த மாதம் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அவருக்கு எதிரான கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்று வலியுறுத்தி கூறியிருந்தார்.  மேலும் நேபாளத்திற்குத் திரும்பப் போவதில்லை என்ற அவரது முடிவு சரியானதே எனவும் தெரிவித்திருந்தார்.  மேலும் "எனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவு குறித்த செய்தி... என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. என்ன செய்வது, என்ன செய்யக்கூடாது என்று என்னால் யோசிக்க கூட முடியவில்லை," என்று அவர் எழுதியிருந்தார். "எனது உடல்நிலை படிப்படியாக மேம்பட்டு வருகிறது, மேலும் (குற்றச்சாட்டுகளுக்கு எதிராக) கடுமையாக எதிர்த்துப் போராட நான் கூடிய விரைவில் நேபாளத்திற்குத் திரும்ப திட்டமிட்டுள்ளேன்." என்றும் பதிவிட்டிருந்தார் லாமிச்சானே.