துருக்கியை விடாத நிலநடுக்கம்...பீதியில் மக்கள்...!

துருக்கியை விடாத நிலநடுக்கம்...பீதியில் மக்கள்...!

துருக்கியில் நேற்று மட்டும் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை ஒட்டிய பகுதிகளில்  நேற்றைய தினம் அதிகாலை முதலே அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. 7.8 ரிக்டர், 7.5 ரிக்டர், 6.0 ரிக்டர் என்ற ரிக்டர் அளவில் தொடர்ந்து 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவான நிலையில், அங்கு கட்டிடங்கள் ஒவ்வொன்றாக இடிந்து விழுந்தது. இதில் இடிப்பாடுகளில் சிக்கி 5000 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்த நிலையில், 3800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, கட்டிட இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. 

இதையும் படிக்க : துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா...!

இதனிடையே துருக்கி அரசு, உயிரிழப்புகள் அதிகமாகி வருவதால் 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. அத்தோடு வரும் 12 ஆம் தேதி துருக்கி மற்றும் வெளிநாடு பிரதிநிதி அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று மீண்டும் துருக்கியில் 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் மீட்பு பணியில் ஏற்கனவே தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. விடாது கருப்பு என்பது போல, துருக்கியை நிலநடுக்கம் விடாமல் துரத்தி வருவதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.