மக்கள் நிலத்தை ஆக்கிரமித்த இராணுவம்... ! திரும்ப வழங்கக் கோரி பேரணி...!!

மக்கள் நிலத்தை ஆக்கிரமித்த இராணுவம்... ! திரும்ப வழங்கக் கோரி பேரணி...!!

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொது மக்களின் நிலத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி நடைபெற்றது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலத்தினை மீண்டும் நிலத்தின் உரிமையாளர்களிடம் வழங்க கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி  நடைபெற்றது. இந்த பேரணியினை வடக்கு -கிழக்கு பெண்கள் குரல் அமைப்பு  மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தின. இதன் இறுதியில்  இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிக்க கோரி வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். முன்னதாக யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பித்த பேரணி வடமாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றது  இதில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை திரும்ப வழங்க கோரியும் இராணுவத்தை வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து வெளியேற்றக்கோரியும் முழக்கங்கள் எழுப்பியவாறு பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 போர் காலகட்டத்தில் இராணுவம் தனது தேவைகளுக்காக பொதுமக்களின் நிலங்கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கரை கைப்பற்றிக்கொண்டது. யுத்தம் முடிவுக்கு வந்து  14 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் மக்களிடம் அவர்களது நிலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. இதில் ஒரு சில பகுதிகள்  இராணுவத்தால் விடுவிக்கப்பட்டாலும் இதுவரையில் பெரும்பாலான பகுதிகள் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.