எரிவாயு விநியோகம் நிறுத்தம்... அதிரடி காட்டிய புதின்- அதிர்ச்சியில் ஐரோப்பா...!

போலந்து மற்றும் பல்கேரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ள நிலையில், இது பிளாக்மெயில் என்று ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகம் நிறுத்தம்...  அதிரடி காட்டிய புதின்- அதிர்ச்சியில் ஐரோப்பா...!

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் 5 கட்ட பொருளாதாரத் தடைகளையும் ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது. இழப்புகளை கண்டுகொள்ளாமல், ஒற்றை இலக்குடன் உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறார் அதிபர் புதின். இதனிடையே தடைகளை நொறுக்கும் விதமாக ரஷ்ய பணத்தில்தான் இனி எரிவாயு விநியோகம் என்றும் இல்லையேல் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் அதிபர் புதின் அறிவித்தார்.

வழக்கம் போல் ஐரோப்பிய நாடுகள் அலட்சியம் காட்டின. ஆனால், எதிர்பாராத நேரத்தில் தாக்குதலைத் தொடங்கியது போல தற்போது போலந்து மற்றும் பல்கேரியாவுக்கான குழாய் வழி எரிவாயு விநியோகத்தையும் நிறுத்தி அதிரடி காட்டியுள்ளார் அதிபர் புதின். தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ரஷ்யா இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போலந்து பரிதாபகரமாக கூறியுள்ளது.

இதனிடையே ரஷ்யாவின் இந்த செயல் பிளாக்மெயில் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வொன்டர் லேயன் குற்றம் சாட்டியுள்ளார். எரிவாயுவை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா அச்சுறுத்துவதில் ஆச்சர்யம் இல்லை என்றும் கூறியுள்ளார். ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் உறுப்பு நாடுகளுக்கு உதவும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் லேயன் தெரிவித்துள்ளார். 

இதேபோல் தங்களுக்கு உதவும் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி பின்வாங்க வைக்கும் முயற்சியே எரிவாயு நிறுத்தம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், நேட்டோவில் இணையக் கூடாது என்பதை கேட்காத உக்ரைன் மீது ராணுவரீதியான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்ய அதிபர் புதின், அதற்கு ஆதரவு தரும் ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதாரப் போரை முன்னெடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.