தலீபான் ஆட்சியால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பேச்சுவார்த்தை

தலீபான் ஆட்சியால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ரஷிய பாதுகாப்பு கவுன்சில் தலைவருடன் அஜித் தோவல் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தலீபான் ஆட்சியால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பேச்சுவார்த்தை

தலீபான் ஆட்சியால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ரஷிய பாதுகாப்பு கவுன்சில் தலைவருடன் அஜித் தோவல் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலீபான்கள், அங்கு ஆட்சி அமைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக கடந்த மாதம் 24-ந் தேதி, பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். அப்போது, தலீபான் அச்சறுத்தலை முறியடிக்க இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்தனர். இதுகுறித்து ஆலோசனை நடத்த இந்தியா வருமாறு ரஷிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜெனரல் நிக்கோலே பட்ருசேவுக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைப்பு விடுத்தார்.

அதன்பேரில், 2 நாள் பயணமாக நிக்கோலே பட்ருசேவ் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று அஜித் தோவலை சந்தித்தார். இருவரும் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். தலீபான் ஆட்சியால், இந்தியா, ரஷியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றி இருவரும் விவாதித்தனர். அப்படி அச்சுறுத்தல் எழுந்தால், அதை முறியடிக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்வது குறித்து பேசினர்.  ஆப்கானிஸ்தான் மண்ணில் ஜெய்ஸ் இ முகமது, லஸ்கர் இ தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது குறித்தும், அங்கிருந்து பயங்கரவாதம் பரவும் அபாயம் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.