உக்ரைனின் 53 முக்கிய இடங்கள் தாக்குதலால் சேதம் - ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு தகவல்

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 53  இடங்கள் சேதமடைந்துள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் 53 முக்கிய இடங்கள் தாக்குதலால் சேதம்  - ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு தகவல்

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமல்ல எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், அரசு கட்டிடங்கள், குடியிருப்புகள் என எதுவும் தப்பவில்லை. பெரும்பாலான இடங்கள் உருக்குலைந்துதான் கிடக்கின்றன.

இந்தநிலையில், வரலாற்று நினைவுச் சின்னங்கள், மதத்தலங்கள், அருங்காட்சியகங்கள் என உக்ரைனின் முக்கிய  53 இடங்கள் குண்டு வீச்சில் சிதைக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. இன்னும் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதால் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யுனெஸ்கோ கூறும் 53 இடங்களில் பத்துக்கும் மேற்பட்டவை கார்கீவ் பகுதியில் உள்ளது. தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவில் தலா 5 இடங்கள் இடம்பெற்றுள்ளன. முழுமையாக அழிக்கப்பட்டுள்ள மரியுபோல் மற்றும் கெர்சன் நகரம் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான ரஷ்யாவின் கடமைகள் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ இயக்குநர் ஆட்ரி அசோலே குறிப்பிட்டுள்ளார்.

விதிமுறைகளை மீறினால் குற்றவாளிகள் சர்வதேச விசாரணைக்கு முன் கொண்டு வரப்படுவார்கள் என்று கூறியுள்ள அவர்  உக்ரைனின் கலாச்சார பாரம்பரியத்தை யுனெஸ்கோ உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, கலாச்சார பாரம்பரியத்திற்கு எதிராக ரஷ்யா 135 குற்றங்களைச் செய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கீவ் பகுதியில் உள்ள உள்ளூர் வரலாற்று அருங்காட்சியகம், மரியுபோலில் நாடக அரங்கம்,  கார்கீவில் ஹோலோகாஸ்ட் நினைவகம் ஆகியவற்றை ரஷ்யா குண்டு வீசி அழித்ததும் இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளது.