பாகிஸ்தானில் இலங்கை நபரை தீ வைத்து கொளுத்தி, செல்ஃபி எடுத்து கொண்டாடிய கொடூரம்... கொந்தளித்த இம்ரான் கான்!!

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என்று பிரதமர் இம்ரான் கான் கொந்தளித்துள்ளார்.
பாகிஸ்தானில் இலங்கை நபரை தீ வைத்து கொளுத்தி, செல்ஃபி எடுத்து கொண்டாடிய கொடூரம்... கொந்தளித்த இம்ரான் கான்!!
Published on
Updated on
2 min read

இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்தவர். இவர் மதத்தை இழிவுப்படுத்திவிட்டாராம். அதாவது, பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்ற அரசியல் கட்சி இயங்கி வருகிறது. இவர்கள் தீவிரமான வலதுசாரி சித்தாந்தத்தை பின்பற்றுகிறவர்கள். பிரியாந்த குமார இந்தக் கட்சியின் ஒரு போஸ்டரை கிழித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

அந்த அரசியல் போஸ்டரில் குரானின் வாசகங்களும் அச்சிடப்பட்டிருந்ததாம். அதைதான் பிரியாந்த குமாரா கிழித்து குப்பையில் எறிந்ததாக சொல்லப்படுகிறது. இதை அங்கிருந்த சிலர் பார்த்துவிட்டு, பேக்டரியில் உள்ள மற்ற தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, பிரியந்தா குமாராவை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். 

ஆத்திரம் தீராமல் அவரை தரதரவென சாலைக்கு இழுத்து வந்து அடித்து, உதைத்துள்ளனர். இந்த கொடுமையான சித்ரவதையால், சம்பவ இடத்திலேயே பிரியந்தா குமாரா துடிதுடித்து மயங்கி விழுந்தார். கண்ணெதிரே அவர் சுருண்டு விழுவதை பார்த்தும்கூட அந்த கும்பலுக்கு ஆத்திரம் தீரவில்லை. பிரியந்தா குமாராவை நடுரோட்டிற்கு இழுத்து வந்து, தீவைத்து உயிருடன் எரித்தும் கொன்றுள்ளது. 

இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து சிதறி கொண்ட நாலாபக்கமும் சிதறி தலைதெறித்து ஓடினர். மேலும் சிலர் கூட்டமாக திரண்டு வந்தனர். அங்கு பதற்றம் ஏற்பட்டதையடுத்து, போலீசார் விரைந்து வந்து, அந்த கூட்டத்தை அடித்து கலைத்தனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் தெஹ்ரிக்- ஏ-லைப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.. கண்டனம் இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் ஹசன்கவார் தெரிவித்துள்ளார். இந்த மனிதாபிமானற்ற செயலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது சம்பந்தமாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார். அதில், "இது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். இதில் தொடர்புடைய எல்லாருமே கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார். 

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கின்றன.. பாகிஸ்தானியர் என்று நம்பப்படும் ஒருவர், இந்த கோர சம்பவத்தின்போது செல்பி எடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

"பாகிஸ்தானியர்கள், இஸ்லாமியர் மதம் நமக்கு இதை சொல்லிக் கொடுக்கவில்லை, இன்று நம் ஒரு நாடாக தோற்றுவிட்டோம், இஸ்லாமியர்களாக தோற்றுவிட்டோம், மனிதர்களாக தோற்றுவிட்டோம், பிரியந்த தியவதன எங்களை மன்னித்துவிடுங்கள்" என்று கண்ணீருடன் பதிவிட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com