காஸாவில் போரை நிறுத்த ஐ,நா சபையில் தீர்மானம்..!

காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஸா மக்களுக்கு அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் 22 அரபு நாடுகளின் சார்பாக ஜோர்டான் ஒரு வரைவு தீர்மானத்தை தயாரித்தது. அதில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், காஸா பகுதிக்குள் அத்தியாவசிய பொருள்கள் சேவைகளை தொடர்ந்து  தங்கு தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

மேலும், பாதுகாப்பு மற்றும் சிகிச்சை கோரும், சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மக்களையும், உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஐ.நா.அமைப்பில், 120 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. கனடா, இங்கிலாந்து, இத்தாலி, இந்தியா, ஜெர்மனி மற்றும் உக்ரைன் உள்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பெரும்பாலான நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததால் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றபட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை  இஸ்ரேல் நிரகரித்துள்ளது. 

இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் அக்டோபர் 7-ந் தேதி மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை ஏறத்தாழ 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் விரைவுப்படுத்தி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. 

இதையும் படிக்க  |  தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாசின் வான்படை தளபதி உயிரிழப்பு..!