உக்ரைனில் 6.5 மில்லியன் மக்கள் தஞ்சம்.. "உயிரிழப்புகளை சரிபார்க்க முடியவில்லை" - ஐ.நா கொடுத்த ஷாக் ரிப்போர்ட்

25-வது நாளை எட்டிய உக்ரைன் போரில், 6.5 மில்லியன் பேர் அகதிகளாக உள்நாட்டிலேயே தஞ்சமடைந்துள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
உக்ரைனில் 6.5 மில்லியன் மக்கள்  தஞ்சம்.. "உயிரிழப்புகளை சரிபார்க்க முடியவில்லை" - ஐ.நா கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
Published on
Updated on
1 min read

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 25-வது நாளாக நீடிக்கிறது. மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா, வெர்க்னோடோரட்ஸ்கே, கிரிம்கா மற்றும் ஸ்டெப்னே ஆகிய பகுதிகளில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் மார்ச் 18ஆம் தேதி வரை குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரத்து 399 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டில் பெரிய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பல நகரங்களில் நிகழ்ந்த உயிரிழப்புகளை சரிபார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பீரங்கிகள், ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே ரஷியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வதற்காக தொண்டு நிறுவனங்கள், அங்கு செல்வதற்கு போராடி வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட நிறுவனம் கூறி உள்ளது. மேலும், 6.5 மில்லியன் பேர் அகதிகளாக உள்நாட்டிலேயே தஞ்சமடைந்துள்ளனர் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com