உக்ரைன் - ரஷ்யா போர்.. மற்றொரு மரியுபோலாக மாறி வரும் செவெரோ டொனட்ஸ்க்!!

ரஷ்யாவின் தீவிர தாக்குதலால் செவெரோ டொனெட்ஸ்க் நகரம் மற்றொரு மரியுபோலாக மாறி வருவதாக உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர்.. மற்றொரு மரியுபோலாக மாறி வரும் செவெரோ டொனட்ஸ்க்!!

இரு மாதங்களுக்குப் பின் போர் வியூகத்தை மாற்றிய ரஷ்யாவுக்கு, அதற்கான பலன்கள் ஒரு மாதத்திற்குள்  கிடைக்கத் தொடங்கின. துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்யா வசமானது. தொடர்ந்து தொழில்துறை நகரங்களைக் கொண்ட டான்பாஸை குறி வைத்து தாக்குதலை தற்போது முன்னெடுத்துள்ளது.

அதில், ஸ்விட்லோடார்ஸ்க் நகரமும் மற்றும் உக்ரைனின் முக்கிய இருப்புப் பாதை வழித்தடம் அமைந்துள்ள லிமான் நகரமும் ரஷ்யாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் உக்ரைனுக்கான ரயில் வழி ஆயுத விநியோகம் முடக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செவெரோ டொனெட்ஸ்க்  நகரச் சுற்றி வளைத்து கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில்தான் மற்றொரு மரியுபோலாக அந்நகரம் மாறி வருவதாக உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது. ஏனென்றால் மரியபோல் நகரத்தையே சின்னாபின்னமாக்கித்தான் ரஷ்யா கைப்பற்றியது. அஸோவ்ஸ்டல் இரும்பாலை மீது மழை போல குண்டுகளை பொழிந்தது. அத்துடன் அங்கிருந்த 2 ஆயிரம் உக்ரைன் வீரர்களை போர்க் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளது. அந்த நிலை இங்கும் வந்து விடக் கூடாது என்பதற்காக உக்ரைன் தனது வீரர்களை  பின்வாங்கும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.