"மிரட்டும் இம்ரான் கான்".. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் எதிர்க்கட்சிகள் - பாக் பிரதமர் பிளான் என்ன?

பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி ஆட்டம் கண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

"மிரட்டும் இம்ரான் கான்".. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் எதிர்க்கட்சிகள் - பாக் பிரதமர் பிளான் என்ன?

பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி மீது எதிர்கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன.

மேலும் கொரோனாவுக்கு பின் அங்கு கடும் பணவீக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலையையும், ஊழலையும் ஒழிக்க தவறிவிட்டதாக அவருடன்  கூட்டணி வைத்திருந்த கட்சியினர் போர் கொடி பிடித்துள்ளனர்.  இதுதவிர தம்மை  விமர்சிப்போரை கைது செய்து சிறையில் அடைக்கும் இம்ரான் கான் செயலுக்கும் கண்டனம் வலுத்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த மாதம் 31ம் தேதி நடைபெற்றது.

இந்தநிலையில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு  இன்று நடைபெறுகிறது. முன்னதாக தனது தலைமையிலான அரசை தக்க வைத்துக்கொள்ள கடைசி பந்து வரை விளையாடுவேன் என சூளுரைத்த இம்ரான் கான், உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக மறைமுகமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் இதனை கண்டித்து இளைஞர்கள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என இஸ்லாமாபாத்தில் நடத்திய பேரணியின் போது கேட்டுக்கொண்டார்.

இதனிடையே இன்றும் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகளுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி ராணுவ ஆட்சியை அமல்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதற்கு சற்றும் அஞ்சாத எதிர்க்கட்சிகள், இம்ரான் கானை இன்றுடன் பதவியிலிருந்து விலக்கும் முடிவில் உள்ளன.