ஏலத்தில் விற்பனை :
நியூயார்க்கில் நேற்று (28.7.2022) நடைபெற்ற ஏலத்தில்
கோர்கோசொரஸ் வகையை சேர்ந்த டைனோசரின் முதல் எலும்புக்கூடு ஏலத்திற்கு வந்தது. அந்த ஏலத்தில் 6.1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது என்று சோதேபிஸ் (பிரிட்டிஷால் நிறுவப்பட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்) தெரிவித்துள்ளது.
கோர்கோசொரஸ் :
கோர்கோசொரஸ் சுமார் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இந்த மாதிரி (specimen) 10 அடி உயரம், அதாவது மூன்று மீட்டர் மற்றும் 22 அடி நீளம் கொண்டது. சாதாரணமாக இதன் எடை இரண்டு டன்கள். மேலும் அதன் குடும்பமான டைரனோசொரஸ் ரெக்ஸை விட சற்று சிறியது.
பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கருத்து :
இது குறித்து பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இது ரெக்சை விட வேகமானது மற்றும் கடுமையானது என்றும், 35,000 நியூட்டன்கள் உடன் ஒப்பிடும்போது சுமார் 42,000 நியூட்டன்கள் வலுவாக கடிக்க கூடியது என்றும் கூறியுள்ளனர்.
எலும்புக்கூடு கண்டுபிடிப்பு :
2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள ஹவ்ரே அருகே ஜூடித் நதி அமைப்பில் இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.இது தான் தற்போது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
சோதேபிஸ் அறிக்கை :
இது குறித்து சோதேபிஸ் ஒரு அறிக்கையில், "இதன் விளைவாக இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மிகவும் மதிப்புமிக்க டைனோசர்களில் கோர்கோசொரஸ் முக்கிய இடத்தை பெறுகிறது " என தெரிவித்துள்ளது.
மேலும் "இந்த கோர்கோசரஸ் பெயர் இல்லாமல் தான் ஏலத்திற்கு வந்தது. ஏலத்தில் வாங்குபவர், டைனோசருக்கு பெயரிடுவதற்கான பிரத்யேக வாய்ப்பையும் வழங்குகிறது " எனவும் சோதேபிஸ் கூறியுள்ளது. அதோடு ஏலத்தில் வாங்கியவர் குறித்த தகவல்களையும் சோதேபிஸ் வெளியிடவில்லை. மற்ற நாடுகளைப் போலல்லாமல், புதைபடிவங்களின் விற்பனை அல்லது ஏற்றுமதியை அமெரிக்கா கட்டுப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.