கோத்தபய உயிருக்கு அச்சுறுத்தலா?

கோத்தபய உயிருக்கு அச்சுறுத்தலா?

இலங்கை மக்களின் போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுகளுக்கு தப்பி சென்றார். 51 நாட்களுக்கு பிறகு சிங்கப்பூரில் இருந்து கடந்த 3-ந்தேதி கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார். அவருக்கு அரசு சார்பில் பங்களா ஒதுக்கப்பட்டது. அங்கு கோத்தபய ராஜபக்சே தங்கி இருக்கிறார்.

அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பங்களாவை சுற்றி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோத்தபய ராஜபக்சேவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக்காரர்கள் அவரை கைது செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். முன்னாள் அதிபருக்கு வழங்கப்படும் சலுகைகள் கோத்தபய ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆபத்து உள்ளது என்றும் அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக இலங்கை பொதுஜன பெர முன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறியதாவது:- கோத்தபய ராஜபக்சே யுத்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார். இதனால் புலம்பெயர் அமைப்புகளினால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கோத்தபய ராஜபக்சேவிற்கு முன்னாள் அதிபருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் வசதிகளை விட அதிக பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மேலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அல்லது பாதுகாப்பு தொடர்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நாங்கள் அவரை சந்திக்கச் சென்றோம். ஆனால் அரசியல் குறித்து எதுவும் பேசப்பட வில்லை. எதிர்கால அரசியல் முடிவுகள் குறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை. கடந்த ஒன்றரை மாத கால அனுபவங்களை மட்டும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார் என கூறினார்.