இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அடுத்த வாரம் அந்நாட்டிற்கு திரும்புவார் என இலங்கையின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலைக்காக ஆயுதங்கள் மற்றும் போர்த் தளவாடங்கள் வாங்கியதால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிப்படைந்தது. இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்ததால் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர்.
மாலத்தீவிலிருந்து வெளியேறிய கோத்தபய
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பினால் இதற்கு பயந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமறைவாக இருந்து வந்தார். போராட்டம் தீவிரமடைந்ததால் கோத்தபய மாலத்தீவிற்கு தப்பியோடினார். அங்கும் அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியதால் அந்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்குத் தப்பியோடினார்.
சிங்கப்பூரிலிருந்து வெளியேற உத்தரவு
கோத்தபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் 15 நாட்களுக்கு மட்டுமே நாட்டில் தங்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியது. அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோத்தபய ராஜபக்சவிற்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.
வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்புவது உறுதி என்று வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரின் வழக்குரைஞருமான அலி சப்ரி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்புவதில் அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் இராஜதந்திர ரீதியாக நாடு திரும்புவார்.அவர் இலங்கையின் குடிமகன், அவர் விரும்பியவாறு பயணம் செய்யலாம் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை
இதேவேளை, கோத்தபயவின் உறவினரான உதயங்க நேற்று முன்தினம் இதே தகவலை வெளியிட்டிருந்தார்.முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும் என சிறீலங்கா பொதுஜன பெரமுனவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.