இத்தாலி பிரதமர், அர்ஜெண்டினா குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் ஜி20 மாநாட்டுக்காக டெல்லி வந்தடைந்துள்ள நிலையில், 15 சர்வதேசத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
ஜி20 கூட்டமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கும் நிலையில், டெல்லியின் பிரகதி மைதானின் பாரத் மண்டபத்தில் 9,10ம் தேதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. தொடர்ந்து டெல்லி வந்தடைந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜெண்டினா குடியரசுத்தலைவர் அல்பெர்டோ ஃபெர்னான்டசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மொரீசியஸ், வங்காளதேசம், அமெரிக்க நாட்டுத்தலைவர்களுடன் இன்றும், இங்கிலாந்து-ஜப்பான்-ஜெர்மனி-இத்தாலி தலைவர்களுடன் நாளையும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனடா, துருக்கி, யு.ஏ.இ, தென்கொரியா, பிரேசில், கமோரஸ், நைஜீரியா உள்ளிட்ட நாட்டுத் தலைவர்களுடனும் அவர் பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். இவ்வாறாக உலகத்தலைவர்கள் 15 பேருடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோபிடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் இன்று டெல்லி வந்தடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து டெல்லியில் இன்று முதல் 10ம் தேதி வரை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தலைவர்களுக்காக அசைவத்தை தவிர்த்து 500 வகையான உணவுகளை தாஜ் ஹோட்டல் தயாரித்துள்ளது.