இலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே!

இலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே!

கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு  நாட்டில் அவருக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக இன்று பதவியேற்றுள்ளார் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்றவுடன் அவசரகால நிலையை நாடு முழுவதும் பிரகடனம் செய்துள்ளதாகவும் மேற்கு மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளதாகவும்  விக்கிரமசிங்கேவின் ஊடக செயலாளர் டினூக் கொலம்பகே ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்திடம்   தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.  ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிகிறது.

விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. பாதுகாப்புப் படையினரின் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை எதிர்த்து, கோபமடைந்த போராட்டக்காரர்களின் கும்பல், இலங்கைப் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவு வந்தடைந்தார் எனவும் அங்கு அவரை மலேசியா சபாநாயகர் முகமது நஷீத் வரவேற்றார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று இன்று பதவி விலகியுள்ளார் கோத்தபய ராஜபக்சே.

ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டங்கள் பல மாதங்களாக தொடர்ந்து வந்த நிலையில் கடந்த வார இறுதியில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட்டபோது அது மேலும் தீவிரமடைந்தது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் என்பதும் இதனால் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்கு குடிமக்கள் சிரமப்படுகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.