இலங்கையில் மீண்டும் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு!

இலங்கையில் மீண்டும் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு!

இலங்கையில் மீண்டும் தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாட்டால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதை காண முடிகிறது. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறைவான பேருந்துகளே இயக்கம்

அதே வேளை, எரிபொருள் சிக்கல்களால் நேற்று 50 சதவீத பேருந்துகளே சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் கடந்த மூன்று நாட்களாக இலங்கையின் தனியார் பேருந்துகள் டீசல் காத்திருப்பதாகவும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பேருந்து சேவை இன்று முதல் நிறுத்தப்படவுள்ளதாக டிப்போ முகாமையாளர் டி. அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

 மேலும், எதிர்வரும் சில நாட்களுக்கு இந்நிலை நீடித்தால் பேருந்து சேவைகள் தடைபடும் என அனைத்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் எச்சரித்துள்ளார். மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பு இல்லை

பெட்ரோலிய நிறுவனத்திடம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டும் இருப்பு இல்லாத காரணத்தால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, முத்துராஜவெல பெட்ரோலிய முனையத்திலிருந்து பெட்ரோல், டீசல் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சாந்த சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடுகளால் தனியார் பஸ் சேவைகள் 50 வீதம் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.