பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தலிபான்கள்!

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் மண்ணில் ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதல்களுக்கு அமெரிக்கா தனது வான்வெளியை பயன்படுத்த அனுமதித்ததாக தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் முகமது யாகூப் குற்றம் சாட்டினார்.

 பாகிஸ்தான் வழியாக நுழைகிறதா அமெரிக்க ட்ரோன்கள்

ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்கா வெளியேறியதில் இருந்து ஆப்கானிஸ்தானை தலிபான் இயக்கம் தான் ஆட்சி செய்கிறது. ஆப்கானிஸ்தானின் வான்வெளியில் அமெரிக்க அத்துமீறல்களை துல்லியமாக கண்காணிக்க முடியவில்லை என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

 ஆனால் எங்கள் தகவல்களின்படி ட்ரோன்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைகின்றன, அவை பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துகின்றன என்று அவர் கூறினார். பாகிஸ்தான் அதன் வான்வெளியை எங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நாங்கள் கோருகிறோம்.

 தோஹா ஒப்பந்தம் மீறப்படுவதாக குற்றச்சாட்டு

 கடந்த மாதம் காபூலில் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியைக் கொன்ற அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் தாங்கள் பங்கு வகித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அதிகாரிகள் முன்பு மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் சட்ட பூர்வமான ஆட்சியாளர்களாக தங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தற்போது கோரி வரும் தலிபான்கள், இந்தத் தாக்குதலை சர்வதேச கொள்கைகள் மற்றும் தோஹா ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என விவரித்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் தலிபான் மற்றும் அமெரிக்காவால் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ் மற்ற ஆயுத இயக்கங்களுக்கான பாதுகாப்பான புகலிடமாக ஆப்கானிஸ்தானை மாற்ற மாட்டோம் என்று தலிபான்கள் ஒப்புக்கொண்டனர், அதே நேரத்தில் அமெரிக்கா 2001 முதல் நாட்டை ஆக்கிரமித்திருந்த தனது இராணுவத்தை திரும்பப் பெற ஒப்புக்கொண்டது.

பாகிஸ்தான் - தலிபான் முரண்பாடு

பாகிஸ்தான் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்தாலும், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்னும் பின்னும் தலிபான்களுக்கு பாகிஸ்தான் இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கியது. எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லையில் வேலி அமைப்பதில் பணிபுரியும் பாகிஸ்தானியர்கள் சமீபத்திய மாதங்களில் தலிபான் போராளிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.