இலங்கையில் பிரதமர் மாற்றம் , இந்தியா உதவி என பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பொது மக்களின் தேவைகள் மட்டும் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அல்லாடுகின்றனர். நாட்டில் சமையல் எரிவாயு, பெட்ரோல் , டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்றும் கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
குறிப்பாக கொழும்பு நுவரெலியா மற்றும் வவுனியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் நீண்டநேரம் வரிசைகளில் காத்திருந்தவர்களில் பலர் ஏமாற்றத்தோடு வெறுங்கையுடன்தான் வீடு திரும்பினர். விரக்தியால் மேலும் சிலர், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்நிலைமையே காணப்பட்டது. தேவைக்கேற்ப எரிபொருள் விநியோகிக்கப்பட முடியாத நிலையில் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சில இடங்களில் குறிப்பிட்டளவு எரிபொருளே விநியோகிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் விநியோகத்திலும் கட்டுப்பாடு காணப்பட்டது.
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றில் மாத்திரமே தற்போது பெட்ரோலை பெற்றுக்கொள்ளகூடிய நிலை காணப்படுவதனால் 1000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோலை பெற்று சென்றனர்.