இலங்கையில் அரசு நிறுவனங்களை தனியார் மயப்படுத்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஐந்து நிபந்தனைகளுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாரக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அரசு நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சி குழு ஒன்று உருவாக்கப்பட்டு அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தாங்கள் முன்வைக்கும் ஐந்து நிபந்தனைகளை அரசாங்கம் செயற்படுத்தினால் அரசு நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசு நிறுவனங்களை மறுசீரமைக்கும் விவகாரம் தற்போது முக்கிய பேசுபொருளாக உள்ளது. 75 வருடகாலமாக அரசு நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப் பட்டமை, ஊழல் மோசடி ஆகிய காரணிகளினால் அரசு நிறுவனங்கள் நஷ்டமடைந்து அதன் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் ஊழியர்கள் முதல், பொறுப்பான அமைச்சர் வரை தாம் எவ்வாறு இலாபம் பெறுவது என்பதில் கவனம் செலுத்துவார்களே தவிர நிறுவனத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பதில் முழுமையாக கவனம் செலுத்தமாட்டார்கள், ஆனால் தனியார் நிறுவனங்களில் நிலைமை இதற்கு மாறாக இருக்கும், சேவையாளர்கள் முதல் நிறுவன தலைவர் வரை நிறுவனத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பதில் அதிக அக்கறை காட்டி அதற்கேற்ப பொறுப்புடன் செயற்படுவார்கள்.இதனை எவராலும் மறுக்க முடியாது.
அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நியமனங்கள் பெரும்பாலும் அரசியல் பரிந்துரையுடன் காணப்படுமே தவிர திறமை மற்றும் தகுதியை அடிப்படையாக கொண்டதாக இருக்காது. ஆகவே அரச நியமனங்களிலும், தனியார் நியமனங்களிலும் பரஸ்பர வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. ஆகவே 5 முக்கிய நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இணங்க முடியும்.
1989-1993 பிரேமதாசா காலம்,1994-2001 சந்திரிகா காலம் மற்றும் 2001-2004 ரணில் காலம் ஆகிய மூன்று தரப்பினரது ஆட்சி காலத்தில் அரசு நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப் பட்டுள்ளன. அதிக நிதியை பெற்றுக்கொண்டு அரசு நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப் பட்டன. ஆகவே தனியார்மயப் படுத்தும் அரசு நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சி குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
தனியார் மயப்படுத்த அரசு நிறுவனத்தின் உண்மை பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு, முழுமையான விபரம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வெளிப்படை தன்மையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு பாராளுமன்ற சர்வக்கட்சி குழுவின் அனுமதி இல்லாமல் எந்த அரச நிறுவனத்தையும் தனியார் மயப்படுத்த இடமளிக்க கூடாது.
தனியார் மயப்படுத்தலின் விளைவாக மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் சந்தை முறைமை உருவாவதை சட்டத்தின் ஊடாக தடை செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு, நாட்டின் இறையான்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களை எக்காரணங்களை கொண்டும் தனியார் மயப்படுத்த கூடாது.
தனியார் மயப்படுத்தப்பட்ட பிறகு அந்த நிறுவனங்கள் மீது நேரடி கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பொருளாதார கேந்திர மையங்களாக உள்ள அரசு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்ற இந்த முக்கிய 5 நிபந்தனைகளையும் அரசாங்கம் செயற்படுத்தினால் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க முடியும்.
அரசாங்கத்திற்கு மிகப்பெரிய நெருக்கடியாக உள்ள அரசு நிறுவனங்களை விற்பதை தவிர மாற்றுத்திட்டம் ஏதும் இல்லை என நிகழ்காலத்தை மாத்திரம் எண்ணிக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டால் அது எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் தீர்மானத்தை அரசாங்கம் பொறுமையாக கையாள வேண்டும் என்றார்.