இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் சேவை தொடக்கம்!

இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் சேவை தொடக்கம்!
Published on
Updated on
1 min read

இந்தியா - வங்கதேசம் இடையே நாடு விட்டு நாடு செல்லும் ரயில் சேவைத் திட்டத்தை இருநாட்டு பிரதமா்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளனர்.

15 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியாவின் அகர்தலா முதல் வங்கதேசத்தில் உள்ள அகவுரா வரை ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இதில் 5 கிலோ மீட்டர் இந்தியாவிலும், 10 கிலோ மீட்டர் வங்கதேசத்திலும் ரயில் பாதை இருக்கும். 2 நாடுகளுக்கு பயணிகள் மற்றும் சரக்குகள் பரிமாற்றத்துக்காக இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதை வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக திரிபுரா, அசாம், மிசோரம் ஆகியவை வழியாக கொல்கத்தா செல்லவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் பாதைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று காணொலி காட்சி முறையில் தொடங்கி வைக்கவுள்ளனர்.

அகர்தலாவிலிருந்து டாக்கா வழியாக அகவுரா நகருக்கு இந்த ரயில் பாதை செல்கிறது. இதற்கான சோதனை ரயில் ஓட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ரயில் பாதையின் இடையே ஒரு பெரிய பாலமும், 3 சிறிய அளவிலான பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. தற்போது கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்குச் செல்ல ரயிலில் 31 மணி நேரமாகிறது.

இந்த ரயில் பாதைத் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் இந்த பயண நேரம் 10 மணி நேரமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்வே திட்டத்துக்காக மத்திய ரயில்வே அமைச்சகம் இதுவரை 153 கோடியே 84 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com