வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இந்தியா-இலங்கை கப்பல் போக்குவரத்து!

இந்தியா-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இலங்கை இடையான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 14 ஆம் தேதி காலை நாகையிலிருந்து துவங்கப்பட்டது. 150 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த கப்பலில்14ம் தேதி முதல் நாளே, 50 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். மீண்டும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திலிருந்து, நாகை துறைமுகம் திரும்பிய பொழுது, 30 பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 7 பயணிகள் முன்பதிவு செய்திருந்தாலும், நிர்வாக காரணங்களாலும் நேற்று பயணிகள் கப்பல் ரத்து செய்யப்பட்டது. இன்று அதிகாலையே துறைமுகம் வந்தடைந்த, முன்பதிவு செய்த பயணிகள் உரிய பரிசோதனைக்கு, பின்னர் கப்பலுக்கு சென்றனர். இன்று பயணிகள் குறைவாக இருந்த காரணத்தால் காலை 07:00 மணிக்கு 15 பயணிகளுடன் பயணிகள் கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு புறப்பட்டது.

பின்னர், மீண்டும் மதியம் காங்கேசன் துறைமுகத்திலிருந்து 23 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் நாகை துறைமுகம் வந்தடைய உள்ளது. இந்த கப்பலில் பயணிகளின் வரவு பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயணிகள் குறைந்தளவில் பயணித்துள்ளனர்.

இந்த காரணத்தினால், இனி வரக்கூடிய காலங்களில், வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை மட்டுமே பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com