ரஷ்யா 6வது நாளாக உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் பெரும் அச்சத்தில் உள்ள உலக நாடுகள், அமைதி பேச்சுவார்த்தை நடத்தும்படி வலியுறுத்தி வருகின்றன.
ரஷ்யாவின் இந்த அதிரடி ஊடுறுவலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, நேற்று ஐநா பொதுச்சபையும் கூடி அவசர ஆலோசனை நடத்தியது. அப்போது, போரில் மரமணமடைந்தவர்களுக்கு சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பேசிய ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ், உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, படைகளை திரும்ப பெறும்படி ரஷ்யாவை எச்சரித்தார். ஆனால் ஐநா சட்ட விதி 51க்கு உட்பட்டே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதலை அரங்கேற்றியதாக ரஷ்யா வாதிட்டது.
ஆனால் இதனை நிராகரித்த மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐநா பொதுச்சபை, ஐநாவின் சட்டவிதி 2ஐ ரஷ்யா மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியது. அப்போது உக்ரைன் தரப்பிலும், ரஷ்யா ராணுவ வீரர் ஒருவர் கடைசியாக தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி காண்பிக்கப்பட்டது. அதில் போரை கண்டு அஞ்சுவதாக குறிப்பிட்டிருந்ததாகவும், போரிட ரஷ்யா வீரர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது.
இதோபோல், ரஷ்யாவின் இந்த ஊடுறுவலை உடனடியாக நிறுத்தாவிட்டால், ஒவ்வொரு நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் என்பது கேள்விக் குறியாகிவிடும் என பிரிட்டன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. அதுமட்டுமல்லாது ரஷ்யா போன்ற தன்னாட்சி நாடுகளான மியான்மர், சூடான், மாலி போன்ற நாடுகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்து தான் எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து, சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்துவது தொடர்பான வரைவு தீர்மானம் குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில், ஐநாவின் 111 உறுப்பு நாடுகள் வாக்களித்தால் தீர்மானம் வெற்றிப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரஷ்யாவுடன் நட்பு பாராட்டி வரும் இந்தியா, சிரியா, சீனா, கியூபா போன்ற நாடுகள் இதனை புறக்கணிக்க கூடும் என சொல்லப்படுகிறது.