ராஜபக்சேவின் அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டதா?

ராஜபக்சேவின் அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டதா?

பதவியில் இருந்து விலகுவதாக உறுதியளித்தும் மாளிகை முற்றுகையிடப்பட்டதால் அமெரிக்கா செல்ல இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய முயன்றதாகவும் ஆனால் அவரின் விசாவிற்கான  கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்து விட்டதாகவும் தெரிகிறது.

இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்த கோத்தபய ராஜபக்சே, 2019 தேர்தலுக்கு முன்னதாக, வெளிநாட்டு குடிமக்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டத்தின் காரணமாக அவருடைய அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார். அவர் பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.  ஆனால் குடிமக்களை திணறடிக்கும் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், நாட்டின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக மாறினார் .

சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் அமெரிக்காவிற்கு செல்ல முயன்றதாகவும் ஆனால் அவருக்கு விசா மறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கோத்தபய தனது ராஜினாமா முடிவைத் தொடர்ந்து இலங்கையை விட்டு வெளியேற முயன்றதாகக் கூறப்பட்டது.  இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளும் அவருடைய பொறுப்பற்ற பதிலையும் எதிர்த்து, கொழும்பில் உள்ள அதிபர் அலுவகம் மற்றும் இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், கோத்தபயவை வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கோரி பல மாதங்களாக போராட்டங்கள் அதிகரித்தன. 

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் ஒரு செய்தித் தொடர்பாளர் கருத்து கேட்டபோது விசா பதிவுகள் அமெரிக்க சட்டத்தின் கீழ் இரகசியமானவை எனவும் எனவே, தனிப்பட்ட விசா வழக்குகளின் விவரங்களை  வெளிப்படையாக கூற முடியாது எனவும் கூறியுள்ளதாக தெரிகிறது. 

ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் அமைதியான, ஜனநாயக முறையிலான அதிகார மாற்றத்தை அடைய ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 

கோத்தபய எங்கே? 

 ஜூலை 13 ஆம் தேதி அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கோத்தபய ராஜினாமா செய்ததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.  பாதுகாப்பு தொடர்பாக  கோத்தபய மேற்கு ஆசிய நாட்டிற்குச் சென்றதாக பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் அவர் மலேசியா சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

கோத்தபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை விமானப்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, அரசியலமைப்பின் கீழ் அதிபருக்கு இருக்கும் அதிகாரங்களின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் முழு அனுமதியுடன், அதிபர், அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜூலை 13 அதிகாலையில் மாலத்தீவிற்கு புறப்படுவதற்கு இலங்கை விமானப்படை விமானம் வழங்கப்பட்டது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019ல் அதிபர் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற கோத்தபய, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் செல்வாக்கற்ற தலைவராக மாறினார்.