உலக நாடுகளில் சேவை நிலையம் என்ற பெயரில் என்ன செய்கிறது சீனா?!
கனடாவின் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் சீன குடியரசின் அனுமதி பெறப்படாத 'காவல் சேவை நிலையம்' இயங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கனடாவின் ராயல் போலீஸ் இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது.
விசாரணையை தொடங்கிய கனடா:
இந்தக் காவல் நிலையங்கள் மூலம் கனடாவில் குடியேறிய சீனக் குடியேற்றவாசிகளைக் குறிவைத்து சீனா தாக்குதல் நடத்துவதாக சமீபத்திய செய்திகள் வந்துள்ளதாக கனடாவின் ராயல் போலீஸ் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து வகையான குற்றங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
நாட்டில் உள்ள எந்தவொரு சமூகமும் வெளிநாட்டு நிறுவனத்தால் அச்சுறுத்தப்படுவதையோ, துன்புறுத்தப்படுவதையோ அல்லது எந்த வகையிலும் பாதிக்கப்படுவதையோ தடுக்கும் என கனடாவின் ராயல் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்:
மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது என்றும் கனடாவின் ராயல் போலீஸ் கூறியுள்ளது. இது நாட்டின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடுவது எனவும் கனடா குடிமக்களின் வாழ்க்கையில் தலையிடும் வெளிநாட்டு ஏஜென்சியின் அனைத்து முயற்சிகளும் கனடாவின் ராயல் போலீஸால் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதில் அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் ஆகியவை அடங்கும்.
மறுப்பு தெரிவித்த சீனா:
இது போன்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து சீன காவல் நிலையங்கள் மற்ற நாடுகளில் இயக்கப்படுவதாகக் கூறப்படும் செய்திகளை சீனா மறுத்துள்ளது. நாட்டிற்கு வெளியே எந்த நாட்டிலும் அமைந்துள்ள 'காவல் சேவை மையங்கள்' சீன குடிமக்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது. இவை சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகளுடன் சீன குடிமக்களுக்கு உதவுவதாகும்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், கனடாவில் சீன காவல் நிலையங்கள் செயல்படுவதாகக் கூறப்படும் இடங்கள் காவல் நிலையங்கள் அல்லது காவல் சேவை நிலையங்கள் அல்ல என்று கூறியுள்ளார். இந்த மையங்கள் மூலம், வெளிநாட்டு சீன குடிமக்களுக்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், உரிமத்திற்கான உடற்கூறு சோதனை போன்ற பணிகள் மட்டுமே இதன் மூலம் செய்யப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்திலும்:
கனடாவைப் போலவே, நெதர்லாந்திலும் சீன காவல் சேவை நிலையம் இயங்கும் வழக்கம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள சீன காவல் சேவை நிலையங்களை மூட நெதர்லாந்து அரசு உத்தரவிட்டது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: குரங்கம்மையின் பெயரை WHO மாற்ற காரணம் என்ன...!