நாகலட்சுமியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.... அமைச்சர் மூர்த்தி!!

நாகலட்சுமியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.... அமைச்சர் மூர்த்தி!!

மதுரையில் தற்கொலை செய்து கொண்ட 100 நாள் வேலைத்திட்ட பணியாளர் நாகலட்சுமியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி - மையிட்டான் பட்டி ஊராட்சி துணைத்தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார், செயலர் முத்து ஆகியோர் மிரட்டியதாக கூறி 100 நாள் வேலைத்திட்ட பணியாளர் நாகலட்சுமி என்பவர், கடந்த புதன் கிழமை ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  செயலர் முத்துவை ஆட்சியர் அனீஷ் சேகர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், இழப்பீடு கோரியும் உடலை வாங்காமல் குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் உள்ளனர்.  நாகலட்சுமி இறந்து நான்காவது நாளாக உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று அமைச்சர் மூர்த்தி அவர்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

நாகலட்சுமியின் உடலுக்கு அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், கூடுதல் ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.  அப்போது தாயின் உடலை பார்த்து அவருடைய 5 பெண் குழந்தைகளும் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

"நாகலட்சுமி இறப்பு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.  அவருடைய இறப்புக்கு காரணமான நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  அவருடைய 5 பெண் குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்து பாதுகாப்பாக வளர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதையும் படிக்க:   மெல்ல அழியும் நாட்டுப்புற கலைகள்... காக்க வரும் இணைய தளம்!!