அதிர்ச்சியளிக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு!!

அதிர்ச்சியளிக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு!!

தமிழ்நாட்டில் தக்காளி உள்ளிட்ட  காய்களின் விலை ஏற்றத்தை தொடர்ந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மூட்டைக்கு 250 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறை சார்பில் பண்ணைப் பசுமைக் கடைகளில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த இரு நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்ததால் ஒரு கிலோ 80 ரூபாய் என்ற அளவில் குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்து மொத்த விலையில் 100 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், சின்ன வெங்காயத்தின்  விலையும் ஒரு கிலோ 220 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சியளித்தது. தற்போது 130 ரூபாய் முதல் 150 வரை விற்பனையாகி வருகிறது. 

இந்த அதிர்ச்சியிலிருந்து நடுத்தர மற்றும் எளிய மக்கள் மீள்வதற்குள் அரிசி விலையும்  வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு கிலோ அரிசிக்கு 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ மூட்டை தற்போது ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளது. 

ஆயிரத்து 200 ஆக இருந்த இரண்டாம் தர அரிசி  ஆயிரத்து 400 ரூபாயாகவும் இட்லி அரிசி 850 ரூபாயிலிருந்து 950 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு மூட்டை அரிசி 250 ரூபாய் வரை விலை ஏற்றம் கண்டுள்ளதால் ஏழை நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதையும் படிக்க || கருப்பசாமிக்கு 18.5 அடி உயரம் கொண்ட அரிவாள்கள் நேர்த்திக்கடன்... பிரமிக்க வைத்த பக்தர்கள்!!