

1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது, சோவியத் முகாம் நாடுகள் யாவும் தாராளச் சந்தைக்குத் தடம் மாற வேண்டுமென அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. முன்பு ராணுவ வலிமையைக் கொண்டு நாடுகளை அடிபணிய வைத்ததுபோல், இப்போது அது மூலதனக் குவிப்பைக் கொண்டு அவற்றை மண்டியிடச் செய்தது.
பெரும்பாலான சோவியத் முகாம் நாடுகள், தங்களது பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து நிலைமாறின. உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் நாசகர விதிகளுக்கு உட்பட்டு, இந்த நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சந்தைகளாகின.
அமெரிக்கா, உலக நாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக முதலாளித்துவம் என்ற சிலந்தி வலையில் சிக்க வைத்துக்கொண்டிருந்தபோது, 'சோசலிசம் அல்லது மரணம்' என்ற முழக்கத்தோடு, அமெரிக்காவின் ஏகாதிபத்திய லாப வெறியைக் கியூபா எதிர்த்து நின்றது.
1959ஆம் ஆண்டு சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சிக்கு எதிரான ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சி வெற்றி பெற்றது. கியூப அரசியலமைப்பில் பிளாட் திருத்தத்தைக் கொண்டு கியூபாவை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அமெரிக்காவுக்கு, காஸ்ட்ரோவின் புரட்சி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
புரட்சிக்கு முன்பு கியூபா ஒரு சுதந்திரக் குடியரசாக இருந்தபோதிலும், அதன் உள்நாட்டு விவகாரங்கள் அமெரிக்காவால் தீர்மானிக்கப்பட்டன. கியூபா, அமெரிக்க நிறுவனங்களின் லாபத்திற்கும் மூலதனப் பெருக்கத்திற்குமான காலனியாகப் பார்க்கப்பட்டது.
நிக்கல், மின்சாரம், தொலைத்தொடர்பு, நிதி உள்ளிட்ட முக்கியத் துறைகள் அமெரிக்காவின் பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. காஸ்ட்ரோ, அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தச் சொத்துகளையும் நிலங்களையும் தேசியமயமாக்கினார்.
உலகத்திற்கே ஏகாதிபத்தியத்தை ஏற்றுமதி செய்து வந்தது அமெரிக்கா. தனது எல்லையிலிருந்து வெறும் 145 கி.மீ. தொலைவில் இருந்த கியூபா, மார்க்சிய-லெனினிய தத்துவத்தை ஏற்றுக்கொண்டு தன்னை ஒரு சோசலிச நாடாகப் பிரகடனம் செய்தது அமெரிக்காவுக்கு எரிச்சலை மூட்டியது.
உலகமே தனது பெரும் நிறுவனங்களின் சுரண்டலுக்கும், மூலதனக் குவிப்பிற்கும் சந்தையாக இருக்க வேண்டும் என்ற வாஷிங்டனின் முடிவுக்கு, கியூபாவின் கம்யூனிசம் எதிராக இருந்தது.
மேலும், 1960களின் முற்பகுதியில் ஹவானாவுக்கும் மாஸ்கோவுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கியூபாவின் சர்க்கரைக்கு ஈடாக ரஷ்யாவின் கச்சா எண்ணெயைப் பரிமாற்றம் செய்துகொள்வதென ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க நினைத்த வாஷிங்டன், கியூபாவில் இயங்கி வந்த அமெரிக்க நிறுவனங்களிடம் ரஷ்ய எண்ணெயைச் சுத்திகரிக்கக் கூடாது எனக் கட்டளையிட்டது. இந்த நிறுவனங்கள் வாஷிங்டனின் முடிவை ஏற்றுக்கொண்டபோது, காஸ்ட்ரோ அவற்றை தேசியமயமாக்கி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தார்.
காஸ்ட்ரோவுக்குப் பதிலடி கொடுக்க நினைத்த அமெரிக்கா, கியூபாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சர்க்கரை ஏற்றுமதி ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய எதேச்சாதிகார நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், சோவியத் ஒன்றியம் கியூபாவின் சர்க்கரையைப் பெருமளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியது.
இதையடுத்து, அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் எதேச்சாதிகார நடவடிக்கைகளை எதிர்த்த காஸ்ட்ரோ, அமெரிக்காவுக்குச் சொந்தமான தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தையும் முழுமையாக தேசியமயமாக்கினார்.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகக் கியூபா மண்ணில், கியூபா மக்களின் உழைப்பால் உருவானவை. இந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அதே நேரத்தில், இந்த நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
அமெரிக்க நிறுவனங்கள் ஈட்டிய உபரி, கியூப மக்களின் உழைப்பைச் சுரண்டிப் பெறப்பட்டது. ஆகவே, காஸ்ட்ரோ தார்மீக அடிப்படையில், கியூப மக்களைச் சுரண்டிக் கொழுத்த இந்த நிறுவனங்களை தேசியமயமாக்கியபோது, வாஷிங்டன் அதற்கு எதிர்வினையாற்ற முடியாமல் திணறியது.
காஸ்ட்ரோவின் கீழ், கியூப அரசு மனித உழைப்பை விடுதலை செய்தது. மனித உழைப்பு பெரும் நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் உபரியை ஈட்டித் தரும் சந்தைப் பொருளாக உள்ள வரை, அது மனிதகுலத்திற்கான, அனைத்து மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான எந்தப் பங்களிப்பையும் செய்யாது.
மனித உழைப்பைக் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து விடுதலை செய்ததன் மூலம் கியூபா ஒரு புரட்சியைச் செய்தது. கியூபாவை தனது சந்தைகளில் ஒன்றாகப் பாவித்தது அமெரிக்கா. 1961 ஆம் ஆண்டு சி.ஐ.ஏ. துணையுடன் கியூபா மீது படையெடுத்து, பன்றி விரிகுடாவில் தோற்றுப்போனது.
புரட்சிகர கியூப அரசை கவிழ்க்க நினைத்த அமெரிக்கா, கியூபாவுடன் வேறெந்த நாடும் பொருளாதார-வர்த்தக உறவு கொள்ளாதவாறு தடைகளை விதித்தது. தொடர் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளையும், பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொண்ட கியூபா, தனது சோசலிச பாதையில் முன்னேறியது. கல்வியும், மருத்துவமும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக்கப்பட்டன. இனவெறியும், நிறவெறியும் அறவே ஒழிக்கப்பட்டன. இயற்கை வளங்கள் யாவும் அரசுடைமையாக்கப்பட்டன.
அனைத்து கியூப மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம் மற்றும் வேலைவாய்ப்பைக் கியூப அரசு உறுதி செய்தது. புரட்சிக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்களை முறியடிக்க, கியூப மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலாளித்துவ நாடுகளைப் போலன்றி, கியூபாவில் மெய்யான மக்களாட்சி கடைப்பிடிக்கப்பட்டது. அரசியல், பொருளாதார, சமூக மாற்றத் திட்டங்கள் மக்களுடனான நீண்டகாலக் கலந்தாய்வுகளுக்குப் பின்னரே செயல்படுத்தப்பட்டன. அரசு, சுரண்டும் முதலாளிகளோடு கைகோர்க்காமல் உழைக்கும் பாட்டாளி வர்க்க மக்களின் நலனுக்காகச் செயல்பட்டது. கியூபா, அதிகாரமும் இறையாண்மையும் மக்கள் வசம் இருப்பதை உறுதி செய்தது. கியூபாவின் உணவுத் தேவையில் 50 சதவீதமும், எண்ணெய், விவசாயம், உற்பத்தித் துறை ஆகியவற்றின் தேவைகளில் 90 சதவீதமும் சோவியத் ஒன்றியத்தில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. அதுபோக, கியூபாவுக்கு மிகவும் குறைந்த வட்டியில் கடனும், அதன் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அதிகபட்ச விலையும் கொடுத்தது சோவியத் ஒன்றியம். அமெரிக்காவின் வர்த்தகத் தடையால் பிற நாடுகளுடனான பொருளாதார-வர்த்தக வாய்ப்புகளை இழந்திருந்த கியூபாவுக்கு, 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு பெரும் பொருளாதாரச் சிக்கலைத் தந்தது.
சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பிறகு, முன்னாள் சோவியத் முகாம் நாடுகளைத் தங்களது பொருளாதாரக் கொள்கையிலிருந்து தாராள சந்தைக்கு நிலைமாற அமெரிக்கா கட்டாயப்படுத்தியது. உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் வாஷிங்டனின் முடிவுகளை வழிமொழிந்தன. அவை முன்னாள் சோவியத் முகாம் நாடுகளை, உலக மூலதனப் போக்கிற்கு இணங்க தங்களது பொருளாதாரத்தைத் திறந்துவிடச் சொன்னது. மேலும், அரசுச் சொத்துகளைத் தனியார்மயமாக்கவும், சமூக நலனுக்கான செலவினங்களைக் குறைக்கவும், சம்பளம் மற்றும் கூலி ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் கட்டுப்பாடுகளை நீக்கவும் நிர்ப்பந்தித்தன. சோவியத் ஒன்றியத்தின் நிதி உதவிகளை இழந்த இந்த நாடுகள் வேறு வழியின்றி உலக வங்கியின் உதவிகளைப் பெறுவதற்காக வாஷிங்டனின் முடிவுகளை ஏற்றுக்கொண்டன. டாலரைக் கொண்டு அமெரிக்கா இந்த நாடுகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்தது. பொருளாதார சீரமைப்புக்குப் பெரும் நிதி உதவிகளை வழங்கிய அமெரிக்கா, இந்த நாடுகளின் வளங்களையும் சட்டங்களையும் தனது சந்தைக்கு ஏற்றாற்போல வளைத்துக் கொண்டது. இந்த நாடுகளில் தனது இராணுவத் தளங்களையும் அமைத்துக் கொண்டது.
பெரும்பாலான சோவியத் முகாம் நாடுகள் தங்களை மாற்றிக் கொண்டபோதும், கியூபா கம்யூனிசத்தைக் கைவிட மறுத்தற்குக் மக்களிடையே வலுவான காரணங்கள் இருந்தன. கம்யூனிச ஆட்சிக்கு முன்னர் நிலவிய கடுமையான பசியும் வறுமையும் மக்கள் மனதில் சந்தைப் பொருளாதாரத்தின் மீதான வெறுப்பை ஏற்படுத்தின. மேலும், 1990 வரை கல்வியிலும் மருத்துவத்திலும் கியூப அரசின் சாதனைகளைக் கண்கூடக் கண்ட மக்களுக்குப் பொருளாதார சீர்திருத்தத்திற்கான அவா ஏற்படவில்லை. கம்யூனிசத்தைக் கைவிடுவது தேசிய இறையாண்மைக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் என்பதையும், மீண்டும் கியூபா அமெரிக்காவின் சந்தையாகிப் போகும் என்பதையும் மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். எனவே, கியூப மக்கள் 'நிலைமாற்றம்' குறித்துச் சிந்திப்பதில்லை, தேசத்தின் சோசலிச வரையறைக்கு உட்பட்டு, புறநிலைமைகளில் ஏற்படும் முற்போக்கான மாற்றங்களுக்கு ஏற்பத் 'தகவமைத்தல்' குறித்து மட்டுமே சிந்திக்கின்றனர். புரட்சியின் சாதனைகளான கல்வி, மருத்துவம், சமூகத்தில் சம உரிமை, முழுமையான வேலைவாய்ப்பு ஆகியவற்றை மீண்டும் அமெரிக்காவிடம் இழந்துவிடக் கூடாது என்பதில் மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.
கியூபா மிகுந்த பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்த இந்த காலகட்டத்தைக் காஸ்ட்ரோ 'சிறப்புக் காலகட்டம்' என அறிவித்தார். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்று இல்லை என்ற கூற்றுக்கு, குட்டித் தீவு நாடான கியூபா தனது சோசலிசத்தைக் கொண்டு பதிலளித்தது. உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, நகர்ப்புறங்களில் இருந்த சிறிய நிலங்களில் கூட மக்கள் காய்கறி, கீரை மற்றும் கிழங்குகளை விளைவித்தனர். இரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்திச் சுற்றுச்சூழலை மாசுபடாது காத்தனர். 2006 ஆம் ஆண்டின் உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கையின்படி, இயற்கையையும் சுற்றுச்சூழலையும் அழிக்காத மனித வளர்ச்சிக் குறியீட்டில் முன்னிலையில் உள்ள ஒரே நாடு கியூபா. 1990 முதல் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தபோதும் கியூபாவில் சமூகப் பாதுகாப்பு மோசமடையவில்லை. 1990 ஆம் ஆண்டு சிசு இறப்பு விகிதம் மற்ற நாடுகளில் அதிகரித்தபோதும், கியூபாவில் அது ஆயிரத்திற்கு 11 என்ற விகிதமாகவே இருந்தது. 2000 ஆம் ஆண்டு இந்த விகிதம் ஆயிரத்திற்கு 6-ஆகக் குறைந்தது. இது ஐரோப்பிய ஒன்றியக் குடைக்குக் கீழிருந்த நாடுகளின் விகிதத்தை விடக் குறைவு. 1990களில் வறுமையின் காரணமாக நிலைமாறிய சோவியத் முகாம் நாடுகளில் சராசரி வாழ்நாள் 69 வயதிலிருந்து 68-ஆகக் குறைந்தது. ஆனால், கியூபாவில் அது 74 வயதிலிருந்து 78 வயதாக உயர்ந்தது.
1990களில் நிலைமாறிய நாடுகளில் வேலையிழப்பு 20% ஆக இருந்தது. ஆனால், கியூப மக்களின் வேலைவாய்ப்பையும் சமூகப் பாதுகாப்பையும் புரட்சிகர அரசு பாதுகாத்தது. கியூபாவில் 98% மக்கள் அரசின் கீழ் வேலை செய்தனர். 1990-93 ஆண்டுகளுக்கு இடையே புதிதாக மொத்தம் 40,000 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. கியூபாவில் வேலையின்மை சதவீதம் 5.4%-லிருந்து 4.3%-ஆகக் குறைந்தது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அரசின் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் உறுதி செய்யப்பட்டன. அன்னையருக்கும் குழந்தைகளுக்கும் கூடுதல் ரேஷன் வழங்கப்பட்டது. உணவுத் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு, சுகாதாரத் துறையினர் மூலம் ஐ.நா. உணவுப் பாதுகாப்புக் கழகம் அளித்த பண்டங்களை அரசு கொண்டு சேர்த்தது. கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கியூபாவில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை. ஆட்குறைப்பு இராணுவத்திலும், செலவு குறைப்பு அரசு நிர்வாகத்திலும் நிறுவனங்களுக்கான மானியத்திலும் மட்டுமே செய்யப்பட்டன. 1991-93 ஆண்டுகளில் கியூபாவின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஆக இருந்தது. அரசின் தொடர் நடவடிக்கைகளால் அது 1995 ஆம் ஆண்டு 5.5% ஆகக் குறைந்தது.
உலகிலேயே அதிக மருத்துவர்-மக்கள் விகிதம் கொண்ட நாடு கியூபா. புரட்சிகர கியூபா அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவத்தை உறுதி செய்தது. கட்டாயத் தடுப்பூசித் திட்டங்கள் மூலம் போலியோ, தட்டம்மை, ரூபெல்லா போன்ற நோய்களை முற்றாக ஒழித்தது. கியூபா, பேரிடர் மற்றும் பெருந்தொற்று களங்களில் தனது மருத்துவர்களை உலகின் மூலைமுடுக்குகளுக்கு அனுப்பி உதவியது. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசக் கண் அறுவை சிகிச்சைகளைச் செய்தது கியூபா. மேலும், ஹவானாவில் உலகின் பல்வேறு ஏழை மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வியை வழங்கியது. உயிரித் தொழில்நுட்பத் துறையில் கியூபா மிகுந்த கவனம் செலுத்தியது. இதனால் 2012-இல் ஏற்றுமதி, 2008-இல் இருந்ததை விட இரு மடங்காக உயர்ந்தது. 1990களுக்கு முன்பு கியூபாவின் ஏற்றுமதி வருமானத்தில் 73% சோவியத் முகாம் நாடுகளுக்குச் சர்க்கரையை ஏற்றுமதி செய்ததால் கிடைத்தது. அப்போது வர்த்தகப் பற்றாக்குறை 200 கோடி டாலர்களாக இருந்தது. ஆனால் 2012 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி சர்க்கரை ஏற்றுமதி வருமானம் வெறும் 3% மட்டுமே. புதிதாக உருவான சுற்றுலா, நிக்கல் சுரங்கத் தொழில், எண்ணெய் சுத்திகரிப்பு, சேவைத் துறை (மருத்துவம், கல்வி) ஆகியவை ஆண்டுக்கு 100 கோடி டாலர் உபரி வர்த்தக வருமானத்தை ஈட்டித் தந்தன.
2004 டிசம்பரில் கியூபாவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி கியூபாவின் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது சேவைக்காக, வெனிசுவேலா நாள் ஒன்றுக்கு 53,000 பேரல் கச்சா எண்ணெயைக் கியூபாவுக்கு வழங்கும் என முடிவு செய்யப்பட்டது. 1990-க்குப் பிறகு கியூபா பெற்ற மிக லாபகரமான ஒப்பந்தம் இதுதான். 2005-க்குப் பிறகு ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்துச் சரக்குகள் மூலம் கிடைத்த வருவாயை விட, இந்த ஒப்பந்தம் மூலம் அதிக அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டது. 2008 ஆம் ஆண்டு கியூபா-வெனிசுவேலா அரசின் கூட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் இருந்து 2005 ஆம் ஆண்டை விட அதிக வருவாய் ஈட்டப்பட்டது. இப்போது 2026-இல் வெனிசுவேலாவின் அதிபரைக் கைது செய்த அமெரிக்கா, கியூபா உடனான அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை முறித்தது. மேலும், மெக்சிகோ போன்ற மற்ற எந்த உலக நாடுகளும் கியூபாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்கக் கூடாது எனவும் நிர்ப்பந்தித்து வருகிறது. அமெரிக்காவின் தடைகளை மீறினால் வர்த்தக-பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரும் என்ற அச்சத்தால் உலக நாடுகள் கியூபாவுக்கு உதவத் தயக்கம் காட்டி வருகின்றன. அமெரிக்காவின் இந்த எதேச்சாதிகாரப் போக்கால் கியூபாவில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. குடிநீர், உணவு, மின்சாரம் ஆகிய அடிப்படைத் தேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
67 ஆண்டுகளுக்கும் மேலாகக் கியூபா மீது எண்ணற்ற வர்த்தக-பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது அமெரிக்கா. புரட்சிகர அரசை கவிழ்க்க எண்ணற்ற முயற்சிகள் நடந்துள்ளன. சோசலிசத்தைத் தகர்த்துத் தாராள சந்தைப் பொருளாதாரத்திற்குப் கியூபாவைத் தடம் மாறச் செய்ய அமெரிக்கா 67 ஆண்டுகளாகத் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கியூபா கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உணவுப் பங்கீட்டுத் திட்டத்தைத் தொடர்வதிலும், சுகாதாரம், கல்வி, அறிவியல் ஆய்வுப் பணிகள், மக்கள் நலனுக்கான திட்டங்களை மையப்படுத்துவதிலும், புரட்சியின் சாதனைகளைப் பாதுகாப்பதிலும் உறுதி காட்டி வருகிறது.
கியூப மக்கள், "கியூபா போராடும், கியூபா வெல்லும்" என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த சமயத்தில் ஒரு தேசத்தின் இறையாண்மையின் மீதும், மக்களின் சுயநிர்ணய உரிமையின் மீதும் நம்பிக்கை கொண்ட, அக்கறை கொண்ட அனைவரும் கியூபாவோடு நிற்க வேண்டும். கியூபாவோடு நிற்பது ஏதோ ஒரு நாட்டின் அரசை ஆதரிக்கும் நிலைப்பாடு மட்டுமல்ல, அது 67 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொருளாதாரத் தடைகள், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள், சர்வதேசத் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை எதிர்கொண்டபோதும், கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு போன்ற புரட்சியின் அடிப்படைச் சாதனைகளை முழுமையாகக் கைவிட மறுத்து நிற்கும் மக்களின் உறுதியை ஆதரிப்பதாகும்.
கியூபா இன்று எதிர்கொள்வது ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, தனது பாதையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமைக்காக நடத்தப்படும் நீண்ட அரசியல் போராட்டமாகும். எனவே, கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் ஏகாதிபத்தியத் தலையீடுகளையும் எதிர்ப்பது என்பது, நாளை எந்தவொரு சிறிய நாடும் தனது அரசியல், பொருளாதார, சமூக எதிர்காலத்தை வெளிநாட்டு வல்லரசுகளின் கட்டளையின்றித் தீர்மானிக்கும் உரிமையைப் பாதுகாப்பதாகும். ஜனநாயகத்தின் மீதும், இறையாண்மையின் மீதும், மக்களின் சுயநிர்ணய உரிமையின் மீதும் நடத்தப்படுகின்ற ஏகாதிபத்திய, முதலாளித்துவ எதேச்சாதிகார அத்துமீறல்களுக்கு நாம் அனைவரும் கியூபாவுடன் நிற்பதன் மூலம் பதிலளிப்போம்!
- ப்ரணாப் சர்மா