
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியேற்றக் கொள்கைகளைக் கடுமையாக்கும் வகையில், உயர் தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசாக்களின் வருடாந்திரக் கட்டணத்தை $100,000 ஆக (சுமார் ரூ. 88 லட்சம்) அதிரடியாக உயர்த்தியுள்ளார். இந்த நடவடிக்கை, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களால் பணியமர்த்தப்படும் இந்தியர்கள் உட்படப் பலரை வெகுவாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டபோது டிரம்ப், "அமெரிக்க ஊழியர்களைப் பணியமர்த்த ஊக்கமளிப்பதே இதன் நோக்கம்" என்றார். அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாப்பதுடன், நிறுவனங்கள் "உண்மையிலேயே அசாதாரணமான திறமையுள்ளவர்களை" அமெரிக்காவிற்குக் கொண்டுவர ஒரு வழிமுறையை இது வழங்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தால், இது மிகப்பெரிய விலை உயர்வுகளை ஏற்படுத்தும்.
திறமைசாலிகளுக்கான விசா கட்டணம் $215-லிருந்து பெரும் தொகையாக உயரும்.
பல ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக உள்ள முதலீட்டாளர் விசா கட்டணம், ஆண்டிற்கு $10,000-$20,000-லிருந்து கடுமையாக அதிகரிக்கும்.
அமெரிக்க நிர்வாகம், 'கோல்ட் கார்டு' என்ற புதிய விசா திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதில் தனிப்பட்ட நபர்களுக்கான 'டிரம்ப் கோல்ட் கார்டு' மற்றும் 'டிரம்ப் பிளாட்டினம் கார்டு' மற்றும் நிறுவனங்களுக்கான 'டிரம்ப் கார்ப்பரேட் கோல்ட் கார்டு' ஆகியவை அடங்கும். இந்த கார்டுகள் சிறப்பு சலுகைகளை வழங்கும். அத்துடன், பேராசிரியர், விஞ்ஞானிகள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றோருக்குக் குடியுரிமைக்கு வழிவகுக்கும் பழைய வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்கு மாற்றாக இவை அமையும்.
டிரம்ப் கோல்ட் கார்டு (Trump Gold Card)
யாருக்கானது: தனிப்பட்ட நபர்களுக்காக.
விலை: $1 மில்லியன் (சுமார் ரூ. 8.8 கோடி).
பெறும் முறை: விண்ணப்பதாரர் தனது விண்ணப்பப் படிவத்துடன், திருப்பித் தரப்படாத Processing கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் (USCIS) ஒரு விரிவான பின்னணி சோதனையை நடத்தி, தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்கும்.
பயன்: ஒருமுறை விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவின் 50 மாகாணங்கள் மற்றும் அதன் பகுதிகள் முழுவதும் இந்தக் கார்டைப் பயன்படுத்தலாம்.
டிரம்ப் பிளாட்டினம் கார்டு (Trump Platinum Card)
யாருக்கானது: தனிப்பட்ட நபர்களுக்காக.
விலை: $5 மில்லியன் (சுமார் ரூ. 44 கோடி).
பெறும் முறை: இதற்கான பதிவு செயல்முறை இன்னும் தொடங்கப்படவில்லை. எனினும், ஒரு தனிநபர் பதிவு செய்து காத்திருப்புப் பட்டியலில் இடம்பெற வேண்டும். இதற்கான செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்தி, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (Department of Homeland Security) சரிபார்ப்புக்குக் காத்திருக்க வேண்டும்.
பயன்: இது அங்கீகரிக்கப்பட்டதும், ஒருவர் அமெரிக்காவில் 270 நாட்கள் வரை தங்கியிருக்கலாம். இந்த நாட்களில், அமெரிக்காவிற்கு வெளியே ஈட்டிய வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது.
டிரம்ப் கார்ப்பரேட் கோல்ட் கார்டு (Trump Corporate Gold Card)
யாருக்கானது: வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்காக.
விலை: $2 மில்லியன் (சுமார் ரூ. 17.6 கோடி).
பெறும் முறை: செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்தி, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் சரிபார்ப்புக்குக் காத்திருக்க வேண்டும். ஒரு சிறிய வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் இதற்கு உண்டு.
பயன்: இந்தக் கார்டை ஒரு ஊழியரிடமிருந்து மற்றொரு ஊழியருக்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ஒரு கட்டணம் செலுத்தி, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.