

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட '3I/ATLAS' என்ற விண்கல் (இன்டர்ஸ்டெல்லார் ஆப்ஜெக்ட்) தற்போது சூரியக் குடும்பத்தின் வழியே பயணித்து வருகிறது. இந்தக் காஸ்மிக் ஆப்ஜெக்ட் (Cosmic Object) வேற்றுகிரகவாசிகளின் தொழில்நுட்பமாக இருக்கலாம் என்று ஒரு பக்கம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானியான ஆவி லோப் (Avi Loeb) என்பவர், இது வேற்றுகிரகவாசிகளின் கைவண்ணம்தான் என்று நம்புவதற்கு ஏழு முக்கியமான காரணங்களை அடுக்குகிறார். விஞ்ஞானிகள் குழுக்கள் இது இயற்கையாக உருவானது என்று சொன்னாலும், லோப் இதில் விதிவிலக்காக இருக்கிறார்.
1. விசித்திரமான வேதியியல் கலவை: பொதுவாக விண்கற்களில் நிக்கல் மற்றும் இரும்பு ஆகிய இரண்டு தனிமங்களும் சேர்ந்தே காணப்படும். ஆனால், இந்த ஆப்ஜெக்ட் வினாடிக்கு சுமார் நான்கு கிராம் நிக்கலை வெளியிடுகிறது. ஆனால், இதில் இரும்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது மிகவும் அசாதாரணமான விஷயம் என்று லோப் கூறுகிறார்.
2. நிக்கல் டெட்ராகார்பனைல் (Nickel Tetracarbonyl) கலவை: இந்த விண்கல்லில் நிக்கல் டெட்ராகார்பனைல் என்ற வேதியியல் கலவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியில், இந்த கலவை பெரும்பாலும் தொழிற்சாலைகளில் ஏற்படும் ரசாயனச் செயல்முறைகளுடன் தொடர்புடையது. எனவே, இந்தக் கோளானது மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் ஆதாரத்தைக் கொண்டிருக்கலாம் என்று லோப் சந்தேகிக்கிறார்.
3. சூரியனை நோக்கி வால் பகுதி (Anti-solar tail): ஆரம்பத்தில் இந்த விண்கல்லின் வால் பகுதி சூரியனை நோக்கியிருந்தது. இது மிகவும் விசித்திரமான ஒரு நிகழ்வு. ஆனால், லேட்டஸ்ட்டான ஆய்வில், இந்த வால் பகுதி இப்போது சூரியனுக்கு எதிர்த் திசையை நோக்கி மாறியிருக்கிறது. இது இந்தக் கோளானது கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இயங்குகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று லோப் கருதுகிறார்.
4. வழக்கத்திற்கு மாறான பாதை: இந்தக் கோளானது சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்திருக்கிறது. இதன் பாதை (Trajectory) மற்றும் வேகமும் (Speed) இதற்கு முன் காணப்பட்ட கோள்களைவிட முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. இந்தக் கோள் ஒரு நீள்வட்டப் பாதையில் இல்லாமல், சூரியனின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்படாத ஹைபர்போலிக் பாதையில் (Hyperbolic Trajectory) பயணம் செய்கிறது.
5. மேற்பரப்பு தன்மை: பொதுவாக விண்வெளியில் இதுபோன்ற பெரிய கோள்கள், பாறைப் பொருட்களுடன் (Rocky Material) சேர்ந்து இருக்கும். ஆனால், '3I/ATLAS' என்ற விண்கல்லில் பாறைப் பொருள் இல்லாததால்தான், இது வேற்றுகிரகவாசிகளின் தொழில்நுட்பமாக இருக்கலாம் என்று லோப் வாதிடுகிறார்.
6. பிரம்மாண்டமான அளவு: இந்தக் கோளின் அளவு மிகவும் பிரம்மாண்டமானது. இது விண்கற்களுக்கு வழக்கத்திற்கு மாறானது. இந்தக் கோளானது சுமார் 12 மைல்கள் அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது வினாடிக்கு சுமார் 58 கிலோ மீட்டர் என்ற நம்பமுடியாத வேகத்தில் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
7. தொழிற்சாலையில் பயன்படுத்தும் பொருட்கள்: லோபின் கூற்றுப்படி, இந்தக் கோளிலிருந்து வெளியேறும் ரசாயனப் பொருட்களும், அதன் கலவையும் தொழிற்சாலைகளில் உலோகங்களைப் பதப்படுத்தவும், பூச்சு வேலைகளுக்கும் பயன்படுத்தப்படும் பொருட்களுடன் மிகவும் ஒத்திருக்கிறது. எனவே, இது வேற்றுகிரகவாசிகளின் தொழிற்சாலைப் பொருளாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
இந்த விண்கல்லின் மர்மத்தை விடுவிக்க, இப்போது நாசாவின் 'சைகி' (Psyche) மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) 'ஜூஸ்' (JUICE) போன்ற விண்கலங்கள் சாதகமான கோணங்களில் இந்தக் கோளை ஆய்வு செய்யத் தயாராகி வருகின்றன. இன்னும் ஒரு சில நாட்களில் (அக்டோபர் 29-30) இந்தக் கோள் சூரியனுக்கு மிக அருகில் வரும்போது கூடுதல் தகவல்களைப் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.