

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், உலக அதிசயங்களுக்கு இணையான ஒரு கலைப் பொக்கிஷம். இந்தக் கோவிலைப் பற்றிப் பல ஆண்டுகளாகப் பேசப்படும் ஒரு சுவாரசியமான விஷயம், அதன் விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது. மதியம் 12 மணிக்குக் கோபுரத்தின் நிழல் தரையில் விழுவதில்லை என்று பலர் நம்புகின்றனர்.
ஆனால் அறிவியல் ரீதியாகப் பார்த்தால், கோபுரத்தின் நிழல் தரையில் விழாமல் இருக்க வாய்ப்பில்லை. கோபுரத்தின் கீழ்ப்பகுதி அகலமாகவும், மேல்பகுதி கூர்மையாகவும் இருப்பதால் நிழல் கோபுரத்தின் மீதே விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கட்டிடக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், 216 அடி உயரமுள்ள ஒரு கோபுரத்தை, அஸ்திவாரம் இல்லாமல் வெறும் கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி எப்படிக் கட்டினார்கள் என்பது இன்றும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. சுமார் 80 டன் எடையுள்ள ஒற்றைக்கல்லை (சிகரம்) எப்படி அவ்வளவு உயரத்திற்குத் தூக்கிச் சென்றார்கள் என்பது வியப்பிற்குரியது.
யானைகள் மற்றும் சாய்வுதளங்கள் மூலம் இந்தக் கல் மேலே கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கோபுரத்தின் உச்சியில் உள்ள கல்லை எப்படிச் செதுக்கினார்கள், அதிலுள்ள நுட்பமான வேலைப்பாடுகள் போன்றவை தமிழர்களின் பொறியியல் அறிவிற்குச் சான்றாகும்.
தஞ்சை பெரிய கோவில் வெறும் ஆன்மீகத் தலம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய அறிவியல் கூடம். கோவிலின் கட்டிடக்கலையில் உள்ள கணித நுணுக்கங்கள் மற்றும் வானியல் தொடர்புகள் இன்றும் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும், பல பூகம்பங்களையும் இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி இந்தக் கோவில் இன்றும் கம்பீரமாக நிற்பது ஒரு அதிசயம் தான்.
நிழல் விழுகிறதோ இல்லையோ, தமிழனின் பெருமை உலகெங்கும் எதிரொலிக்கக் காரணமான இந்தக் கோவில் ஒரு கட்டிடக்கலை மர்மம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சோழர்களின் அந்த ரகசியத் தொழில்நுட்பத்தை மீட்டெடுக்க முடிந்தால், அது நவீன கட்டிடக்கலைக்கே ஒரு பெரிய பாடமாக அமையும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.