
ஒவ்வோரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் தேதி, இந்தியாவின் மிகச்சிறந்த பொறியாளரும், மைசூர் சமஸ்தானத்தின் முன்னாள் திவானுமான சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 1861-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்த விஸ்வேஸ்வரய்யா, தனது புதுமையான திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் நவீன இந்தியாவை வடிவமைப்பதில் பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
விஸ்வேஸ்வரய்யாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளில், மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் கட்டுமானம் முதன்மையானது. இந்த அணை அந்தப் பகுதியில் நீர்ப்பாசன முறையை முழுவதுமாக மாற்றியமைத்தது. மேலும், அவர் ஹைதராபாத்துக்கான வெள்ளப் பாதுகாப்பு அமைப்பையும் வடிவமைத்தார். அவரது சிறந்த பொறியியல் திறன்களுக்காக, இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' மற்றும் 'பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் நைட் கமாண்டர்' போன்ற பட்டங்களையும் பெற்றார்.
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய இந்தியாவின் சிறந்த பொறியாளர்கள்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இந்தியாவின் ராக்கெட் மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவுகணையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த அவர், இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகவும் பணியாற்றினார்.
சதீஷ் தவான்
சதீஷ் தவான் ஒரு சிறந்த விண்வெளி பொறியாளர் மற்றும் கணிதவியலாளர். இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த இவர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டினார். திரவ இயக்கவியல் துறையிலும் (fluid dynamics) இவரது ஆய்வு குறிப்பிடத்தக்கது.
வர்கீஸ் குரியன்
இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வர்கீஸ் குரியன், கூட்டுறவு மாதிரிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளித்து, இந்தியாவை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றினார்.
டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா
டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா, இந்தியாவின் அணுசக்தி ஆராய்ச்சி திட்டத்தைத் தொடங்கி, நாட்டின் அணுசக்தி கொள்கைக்கான அடித்தளத்தை அமைத்தார். அணு இயற்பியல் துறையில் இவர் சர்வதேச அளவில் மதிக்கப்பட்டவர்.
இ. ஸ்ரீதரன்
இந்தியாவின் மெட்ரோ மனிதர் என்று பிரபலமாக அழைக்கப்படும் இ. ஸ்ரீதரன், டெல்லி மெட்ரோ போன்ற திட்டங்கள் மூலம் இந்தியாவின் பொதுப் போக்குவரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.
பொறியாளர்கள் தினம் ஏன் முக்கியமானது?
பொறியாளர்கள் தினம் என்பது, கடந்த கால சாதனைகளைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கமளிப்பதாகும். விஸ்வேஸ்வரய்யா முதல் நவீன காலப் பொறியாளர்கள் வரை, அவர்களின் பங்களிப்புகள் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உதவுகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.