நம் பாரதத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் சமாதிகளாக இருந்தாலும் உருவமற்று வாழ்ந்து உலக உயிர்களை எல்லாம் காத்திருக்கிறார்கள்.
புத்தனும் ஒரு சித்தரே, வாழ்வியலுக்கு வழிகாட்டிய வள்ளுவரும் ஒரு சித்தரே. தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியெனும் ஒரு சித்தரே. சித்தர்கள் என்பவர்கள் சிந்தை தெளிந்தார் என்கிறது திருமந்திரம். 'நிறைமொழி மாந்தர் 'என்கிறது திருக்குறள். 'சிந்தை தெளிந்திருப்பான் எவனோ, அவனே சித்தன்' என்கிறது வால்மீகி ஞானம்.
தமிழக ஆலயங்களில் வெவ்வேறு சித்தர்களின் ஜீவ சமாதிகளும் காணப்படும் நிலையில் மயிலாடுதுறை அருகே சித்தர் காடு எனும் இடத்தில் 64 சித்தர்களும் சமாதி அடைந்த பூமியாக காட்சி அளிக்கிறது.
ஒரு சித்தர் சமாதி என்றாலே உயிர் ஆற்றல் உள்ள இடமாக கருதப்படும் போது 64 சித்தர்கள் அடங்கியிருக்கும் இந்த சித்தர் காடு ஆற்றல்களின் ஐக்கியம் என்றே கூறலாம்.
பதினான்காம் நூற்றாண்டில் சைவ சீர்காழியில் அவதரித்த சிற்றம்பலநாதன் என்பவர் ஆறுமுகனான முருகன் மீது அளவற்ற பற்றுக்கொண்டு மெய்யுணர்வின் உச்சத்தை அடைந்து சிற்றம்பலநாடி சித்தராக மாறினார்.
ஒருமுறை சீடர்களுடன் சித்தர் உணவருந்தும் போது அதில் நெய்க்கு பதிலாக வேப்ப எண்ணெய் கலந்ததை அறிந்த கண்ணப்பர் என்ற சீடர், உணவு கசப்பதாக கூற, இதை கண்ட சித்தர் நமது திருக்கூடத்தில் இன்னும் பக்குவம் இல்லாதவரும் உள்ளனர் போலும் எனக் கூறினார். இதனால் மனமுடைந்த கண்ணப்பர் ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறினார்
இதன் பின்னர் காலங்கள் கடந்த நிலையில் சிற்றம்பலநாடி சித்தர் மயிலாடுதுறை அருகே சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தனது 63 சீடர்களுடன் ஜீவ சாமதி அடைந்தார். இதனை அறிந்த கண்ணப்பர் கண்ணீர் மல்க குருவின் சமாதியில் விழுந்து கதறினார். அப்போது யாரும் எதிர்பாராதபடி இடி முழக்கம் போன்ற ஓசையுடன் சமாதியை விட்டு வெளியே வந்த சிற்றம்பலநாடி சித்தர், கண்ணப்பரை அணைத்து தம் மடியில் அமர்த்திக் கொண்டு மீண்டும் சமாதியானதாக தல வராலாறு கூறுகிறது.
கிழக்கு நோக்கிய கோவிலின் உள்ளே கருவறைக்குள் நாயகரான சிற்றம்பல நாடிகள் ஜீவ சமாதியும், அதன்மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு நமக்குக் காட்சி தருகிறது.
கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் சமாதி அடைந்ததை குறிக்கும் விதமாக அறுபத்து மூன்று சிவலிங்கத் திருமேனிகள், காணப்படுகின்றன.
ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீர்காழி சிற்றம்பல நாடி சித்தருக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுவதோடு மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகளும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து வைபவங்களும் சிறப்பாக நடத்த படுகிறது.
சித்தர்கள் பெரும் ஆற்றாலோடு சூழ்ந்திருக்கும் இந்த சித்தர் காடு கோவிலில் காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தியானங்கள் செய்து மன அமைதி பெறுவதோடு தங்களின் வேண்டுதல் யாவும் நிறைவேறுவதாக தெரிவிக்கின்றனர்.
மாலை முரசு செய்திகளுக்காக மயிலாடுதுறை செய்தியாளர் ஜீவானந்தத்துடன் கலைமாமணி நந்தகுமார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்